நம்மூர்

வாக்காளர்கள் திமுகவுக்குசரியான பாடம் புகட்டுவார்கள்”:நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி பேட்டி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்ய இறுதிநாளான இன்று (17-ம் தேதி), நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மா.கி. சீதாலட்சுமி, ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.முன்னதாக, ஈரோடு சூரம்பட்டி நான்கு சாலை சந்திப்பு பகுதியில் வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஒன்று திரண்டனர். அங்கிருந்து வேட்புமனு தாக்கல் செய்யும் இடமான மாநகராட்சி அலுவலகத்திற்கு ஊர்வலமாக செல்ல அவர்கள் திட்டமிட்டு இருந்தனர். ஆனால், காவல்துறையினர் ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்தனர்.இதையடுத்து வேட்பாளர் சீதாலட்சுமி மட்டும் சிறிது தூரம் நடந்து சென்று தனது எதிர்ப்பை பதிவு செய்து விட்டு, கார் மூலம் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவை மனுத் தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து , வேட்பாளர் சீதாலட்சுமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:சூரம்பட்டி நான்கு சாலை சந்திப்பு பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்து மனுத்தாக்கல் செய்ய போலீஸார் அனுமதி மறுத்து விட்டனர். திமுகவினர் இப்போதே அராஜகத்தை தொடங்கி விட்டனர். சட்டத்திற்கு உட்பட்டு பிரச்சாரம் செய்த நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுகவின் அடக்குமுறையை மீறி, சட்டத்திற்கு உட்பட்டு எங்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், பிரச்சாரம் மேற்கொள்வோம். வாக்காளர்களைச் சந்தித்து நீதி கேட்போம். அவர்கள் எங்களை ஆதரித்து திமுகவிற்கு சரியான பாடம் புகட்டுவார்கள்.
விவசாயிகளும், நெசவாளர்களும் வாழ்வாதாரத்தை இழக்க திராவிட ஆட்சிகள் குறிப்பாக திமுக தான் காரணம். அரசியல் என்பது மக்களுக்குச் செய்யும் சேவை என்று சீமான் என்னை வேட்பாளராக நிறுத்தி உள்ளார். திராவிட கட்சிகள் பதவியை தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்தியதால், மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை.
நான் இந்த பகுதியில் 13 ஆண்டுகள் ஆசிரியையாக பணிபுரிந்துள்ளேன். இப்பகுதி மக்களின் தேவைகள் எனக்குத் தெரியும். மஞ்சள் நகரான ஈரோடு, இன்று புற்றுநோய் நகராக மாறியுள்ளது. காலிங்கராயன் வாய்க்கால் தூர்வாரப்படாமல் கழிவுகள் நிரம்பி வழிகின்றன. அடிப்படை சாலை வசதி, சாக்கடை வசதிகள் இல்லை. மின் கட்டண உயர்வால் வணிகர்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.நான் வெற்றி பெற்றால், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை நாங்கள் செயல்படுத்துவோம். மக்கள் எங்களுக்கு வாக்குச் செலுத்தி வெற்றி பெறச் செய்ய தயாராகி விட்டனர். இது வரை இல்லாத மாற்றத்தைத் தர ஈரோடு தயாராகி விட்டது.இந்த மண்ணுக்கு தேவையான அனைத்தையும் சீமான் பேசி வருகிறார். எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது 20ம் தேதி உறுதியாகும். அதனை சீமான் அறிவிப்பார்.இவ்வாறு பேட்டியில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி தெரிவித்தார்.