ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் , ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இன்று (ஜன.17) தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். ராஜ்யசபா எம்.பி ., அந்தியூர் செல்வராஜ், மாவட்ட திமுக துணை செயலாளர் செந்தில்குமார் , தலைமை செயற்குழு உறுப்பினர் குமாரசாமி, மற்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத் ஆகியோர் உடனிருந்தனர்.வேட்புமனு தாக்கலுக்குப் பின்னர், வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: தந்தை பெரியாரின் வழித்தோன்றல்களான திருமகன் ஈவெரா, ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் மறைந்த நிலையில், இந்த இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. திராவிட மாடல் அரசின் பல்வேறு நலத்திட்டங்களால், 2026ம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். திராவிட மாடல் அரசின் மக்கள் நலத்திட்டங்களை முன் வைத்து இந்த இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடுகிறோம். எனவே, வரலாற்றுச்சிறப்பு மிக்க மாபெரும் வெற்றியை இந்த இடைத்தேர்தலில் மக்கள் எங்களுக்கு வழங்குவார்கள் என்று நம்புகிறோம். நாங்கள் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் 200 சதவீத வெற்றி கிடைக்கும் என பெண்கள் சொல்கிறார்கள். எங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பை அளித்து வருகின்றனர். இது வரை 9 வார்டுகளில் மக்களைச் சந்தித்துள்ளோம்.
திருமகன் ஈவெரா, ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் செயல்படுத்த நினைத்த, விட்டுச் சென்றுள்ள அனைத்து திட்டங்களும், பணிகளும் நிறைவேற்றப்படும். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு என்று தனிப்பட்ட எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. பொய்யும் புரட்டும் பேசும் கட்சியாக நாம்தமிழர் கட்சி உள்ளது. . அவர்களோடு போட்டியிடுவது காலத்தின் கொடுமையாகக் கருதுகிறேன். அவர்களுக்கு நான் பதில் சொல்ல தயாராக இல்லை. ஈரோட்டிற்கு என்ன செய்ய வேண்டும் என இங்கு பிறந்து வளர்ந்த எனக்கு முழுமையாகத் தெரியும். எனவே, எங்கோ இருந்து வந்து எழுதிக் கொடுத்ததை பேசுபவர்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை. இவ்வாறு பேட்டியில், திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் தெரிவித்தார்
வரலாற்று சிறப்புமிக்கமாபெரும் வெற்றி கிடைக்கும்”: திமுக வேட்பாளர் சந்திரகுமார் பேட்டி
Shares: