நம்மூர்

ஆகாயத் தாமரை செடிகளை அகற்றும் பணி தொடக்கம்

ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணி தொடங்கியது.
ஈரோட்டில் மாநகராட்சி 3ம் மண்டலத்திற்கு உட்பட்ட முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் பெரும்பள்ளம் ஓடையின் குறுக்காக சூரம்பட்டி அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த அணை மூலம் ஈரோடு, மொடக்குறிச்சி பகுதியில் 2,450 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. தற்போது அணைக்கட்டு முற்றிலுமாக ஆகாயத்தாமரை செடிகள் ஆக்கிரமித்து தண்ணீர் ஓட்டம் பாதிக்கப்பட்டு வந்தது. அதேபோல், நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலும் செடி, கொடிகள் ஆக்கிரமித்தும், குப்பைகள் சூழ்ந்தும் காணப்பட்டது. இதனால், சூரம்பட்டி அணைக்கட்டில் ஆகாய தாமரை செடிகளை அகற்றவும், நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலை தூர்வாரவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன்பேரில், சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து நஞ்சை ஊத்துக்குளி வரை 13 கி.மீட்டர் தூரத்திற்கு தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில், முதற்கட்டமாக நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலில் ரூ.21 லட்சம் மதிப்பில் 4 கி.மீட்டர் தூரத்திற்கு தூர்வாரும் பணி துவங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில், சூரம்பட்டி அணைக்கட்டில் ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை செடிகளை ஈரோடை அமைப்பு சார்பில் அகற்றும் பணி தொடக்க விழா இன்று (செப்.24) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமை வகித்து ஆகாய தாமரைகளை அகற்றும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஈரோடு தொகுதி எம்.பி.,பிரகாஷ், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சிவக்குமார், மண்டல தலைவர் சசிக்குமார், ஈரோடை அமைப்பின் தலைவர் டாக்டர் சுதாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.