நம்மூர்

மின் கம்பத்தில் கார் மோதி 2 பெண்கள் பலி

கோவை நோக்கி சென்றுக் கொண்டிருந்த கார் ஒன்று, ஈரோடு வில்லரம்பட்டி அருகே மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணித்த பெண் நடன கலைஞர்கள் 2 பேர் உயிரிழந்தனர். ஈரோடு மாணிக்கம்பாளையம் காவேரி நகரை சேர்ந்தவர் கலைச்செல்வன் (26). இவரின் தந்தை , கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரை பார்ப்பதற்காக கலைச்செல்வன் இன்று (அக்.8) அதிகாலை காரில் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையறிந்த கலைச்செல்வனின் நண்பர் ஒருவர், பி.பெ.அக்ரஹாரத்தில் அவருக்கு தெரிந்த பெண் நடன கலைஞர்கள் இரண்டு பேர் ஈரோட்டில் இருந்து கோவைக்கு செல்ல இருப்பதாகவும், அவர்களை கோவையில் இறக்கி விடும்படி கலைச்செல்வனிடம் கூறியதாகவும், இதையடுத்து கலைச்செல்வன், பி.பெ.அக்ரஹாரத்தில் இருந்த அந்தியூர் மைக்கேல்பாளையத்தை சேர்ந்த சவுந்தர்யா (25), கோவை சந்திராபுரம் குறிச்சி பகுதியை சேர்ந்த ரிஜ்வானா (20) ஆகியோரை இன்று அதிகாலை காரில் ஏற்றிக் கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. ஈரோடு நசியனூர் சாலையில் வில்லரசம்பட்டி அருகே சென்றபோது, கார் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் கார், மின் கம்பத்தில் மோதி, தொடர்ந்து மரத்திலும் மோதி உருண்டு சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணித்த சவுந்தர்யா, ரிஜ்வானா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு வடக்கு போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து கிரேன் வாகனம் மூலம் காரை வெளியே எடுத்து, காரின் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த கலைச்செல்வனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த சவுந்தர்யா, ரிஜ்வானா ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ஈரோடு வடக்கு போலீசார் நடத்திய விசாரணையில், கலைச்செல்வன் காரை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்ததாக தெரிய வந்துள்ளது.இதையடுத்து, கலைச்செல்வன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.