ஈ
ஈரோடு மாவட்டத்தில் இரண்டு நாள் பயணமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.19) ஈரோடு வருகை தந்துள்ளார். முன்னதாக, பெருந்துறை அருகே விஜயமங்கலம் சுங்கச்சாவடி முதல் ஈரோடு வரை வழி நெடுகிலும் திமுக கட்சியினர் பூர்ணகும்ப மரியாதையுடன் மேள தாளத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். இதனிடையே, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் ஈரோடு அருகே கதிரம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட நஞ்சனாபுரம் கிராமத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் இரண்டு கோடியாவது பயனாளர்க்கு மருந்துப் பெட்டகம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அதன்படி ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தின் இரண்டு கோடியாவது பயனாளரான நஞ்சனாபுரத்தை சேர்ந்த , உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட சுந்தரம்பாள் என்பவரின் இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அவருக்கு மருந்துப் பெட்டகத்தை வழங்கினார். இதை தொடர்ந்து , அதே பகுதியில் ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தில் பிசியோதெரபி மூலம் பயன் பெற்றுவரும் வசந்தா என்பவர் இல்லத்திற்கும் முதலமைச்சர் நேரில் சென்று சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்வுகளின் போது வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அந்தியூர் ப. செல்வராஜ் எம்.பி., ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா , உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். இதையடுத்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: இந்த ‘மக்களவைத் தேடி மருத்துவம்’ திட்டம் கடந்த 2021ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில் நமது முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. தொடங்கி வைத்த போது ,இத்திட்டமானது ஒரு கோடி பேரை சென்றடைய வேண்டும் என்று முதலமைச்சர் கூறியிருந்தார். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம்,பிசியோதெரபி போன்ற தொற்றா நோய்களுக்கான மருத்துவத்தை வீடு தேடி சென்று மருத்துவம் பார்த்து மருந்துகள் தருவதே இத்திட்டத்தின் நோக்கம். இந்த திட்டத்தின் 50 லட்சமாவது பயனாளராக சித்தாலப்பாக்கத்தில் ஒருவருக்கும் , அதை தொடர்ந்து திருச்சியில் 1கோடியே ஒன்றாவது பயனாளருக்கும் மருந்து பெட்டகத்தை முதலமைச்சர் வழங்கினார். இத்திட்டம் படிப்படியாக வளர்ந்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களை சென்றடைந்திருக்கின்ற நிலையில் இத்திட்டத்தின் 2 கோடியாவது பயனாளராக ஈரோடு மாவட்டம் நஞ்சனாபுரத்தில் சுந்தரம்பாள் என்பவருக்கு மருந்து பெட்டகத்தை முதலமைச்சர் இப்போது வழங்கியுள்ளார்.
உலகில் தொற்றா நோய்களுக்காக மக்களைத் தேடி மருத்துவம் பார்க்கும் திட்டம் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வருவதற்காக நமது ‘ மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்திற்கு 2024ம் ஆண்டுக்கான ஐ.நா.சபையின் விருது கடந்த செப்டம்பர் மாதம் வழங்கப்பட்டுள்ளது. இவ்விருது பெற்ற போது, இத்திட்டத்தில் 1கோடியே 97லட்சம் பயனாளர்கள் எண்ணிக்கை இருந்த நிலையில் இன்று 2 கோடியை எட்டியுள்ளது.
இத்திட்டத்தில், உயர் இரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 1,00,01,363 பேர், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 49,45,745 பேர், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 44,28,972 பேர், நோய் ஆதரவு சிகிச்சை பெறுபவர்கள் 5,40,822 பேர், இயன்முறை சிகிச்சை பெறுபவர்கள் 7,25,042 பேர், சிறுநீரகம் சிகிச்சை (டயாலிஸிஸ்) பெறுபவர்கள் 434 என்கின்ற வகையில் இதுவரை 2 கோடியை கடந்து இந்த சிகிச்சைகள் சென்றுக் கொண்டிருக்கிறது. அதேபோல் தொடர் சேவை என்கின்ற வகையில் 4கோடியே29லட்சத்து71ஆயிரத்து772பேர் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளனர். இதில் ஈரோடு மாவட்டத்தில் 7லட்சத்துக்கும் அதிகமானோர் இத்திட்டத்தால் பயன் பெற்று உள்ளனர். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.அமைச்சர் மா.சுப்பிரமணியன் மேலும் கூறுகையில்,
“அம்மா கிளினிக் திட்டம் மாநில அரசின் நிதி இல்லாமல் என்ஹெச்எம் எனப்படும் தேசிய நலவாழ்வு குழுமத்தின் நிதியாதாரம் கொண்டு ஒரு வருடத்திற்கு மட்டுமே ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. ஒரு வருடத்திற்கு பின்னர் தானாகவே அந்த ஒப்பந்தம் முடிந்து விட்டது. ஆனால் அம்மா கிளினிக்கை இந்த அரசு வந்த பிறகு தான் மூடியது போன்றதொரு தோற்றத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஏற்படுத்தி வருகிறார்” என்றும் குறிப்பிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
+++