ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகே ராட்டை சுற்றிப்பாளையத்தில் அமைந்துள்ள பைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி தினமான இன்று (அக்.24) இக்கோயிலில், பைரவ பீடத்தின் ஆன்மீக குரு ஸ்ரீ விஜய் சுவாமிகள் தலைமையில் பைரவருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றன. பக்தர்கள் கருவறைக்குள் சென்று பைரவருக்கும், ஸ்வர்ணலிங்கத்திற்கும் பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து பைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதேபோல் கோயிலில் முகப்பில் உள்ள 39 அடி உயர காலபைரவர் சிலைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக கோயிலின் முன்பு உள்ள பைரவர் சிலைக்கு பக்தர்கள் தேங்காயில் விளக்கு ஏற்றி வழிபட்டனர். இந்த அஷ்டமி பூஜையில் ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.