ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தனவாசி கரடு பகுதியில் ஒரு கோடி சிவலிங்கம் ஆலயம் நிர்மாணிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போது கோவில் வளாகத்தில் சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்து தினந்தோறும் பூஜைகள் நடைபெற்று வருகிறது. ஒரு கோடி சிவலிங்கம் ஆலயத்தில் ஒரே கல்லினால் ஆன 12 டன் எடை மற்றும் 17 அடி உயரம் கொண்ட ஒரு லட்சத்து எட்டு லிங்கங்கள் கொண்ட சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருக்கயிலாய வாத்தியங்கள் முழங்க 12 டன் எடை மற்றும் 17 அடி உயரமுள்ள சிவலிங்கத்தை கிரேன் மூலம் பீடத்தில் நிலை நிறுத்தும் பணி நடைபெற்றது. பின்னர் 17 அடி உயரமுள்ள சிவலிங்கத்திற்கு திருமஞ்சனம், பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அபிஷேக பூஜை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற அலங்கார பூஜை மற்றும் தீபாராதனையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.