விளையாட்டு

ஈரோட்டில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் மாவட்ட ஆட்சியர்,எஸ்பி உட்பட 4ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்…

ஈரோடு மராத்தான் -2024 எனும் மராத்தான் போட்டி , ஈரோட்டில் இன்று காலை நடைபெற்றது. போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இம் மாரத்தான் போட்டி 21,10 மற்றும் 5 கிலோமீட்டர் என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. இம்மூன்று பிரிவு போட்டிகளை முறையே மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா,மாவட்ட போலீஸ் எஸ்.பி., ஜவகர் , தமிழ்நாடு போலீஸ் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். இம்மராத்தானில் , ஆண்கள், பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் தொடங்கிய இம் மாரத்தான் போட்டி, மீண்டும் அக் கல்லூரியிலேயே வந்து நிறைவுபெற்றது. இம்மராத்தானில் ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா,மாவட்ட போலீஸ் எஸ்.பி., ஜவகர் , தமிழ்நாடு போலீஸ் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் பங்கேற்றனர். தொடக்க விழா நிகழ்ச்சியில், ஒளிரும் ஈரோடு அமைப்பின் தலைவர் சின்னுசாமி, முதலியார் கல்வி அறக்கட்டளை தலைவர் ராஜமாணிக்கம், செயலாளர் பாலு சாமி, பெருந்துறை சேப்டி மோட்டார்ஸ் நிர்வாக இயக்குநர் ராசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பின்னர் , தமிழ்நாடு போலீஸ் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு , செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், ” இந்த ஈரோடு மராத்தான் – 2024 சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றிருக்கிறது “என்று பாராட்டினார். மேலும் அவர் ” உடல் நலனை பேணிக் காக்க அனைவரும் இவ்வாறு மராத்தான் ஓட்டத்தில் பங்கேற்க வேண்டும். ஓட்டத்தை விட சிறந்த விளையாட்டு எதுவுமில்லை. ஓட்டம், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது ” எனவும் குறிப்பிட்டார். மேலும், கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், ” ஏடிஎம் கொள்ளையர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். கைகளில் ஆயுதங்களை வைத்திருப்பவர்கள். ஏற்கனவே முன்பொரு சமயம், திருவண்ணாமலை, செங்கம் பகுதிகளில் அடுத்தடுத்து ஏடிஎம் கொள்ளைகளில் ஈடுபட்டவர்களை வடமாநிலத்திற்கே சென்று பிடித்தோம். காவல்துறையினர், தங்களது உயிரையும் பொதுமக்களின் உயிரையும் பாதுகாக்க தான் நடவடிக்கைகளை எடுக்கின்றனர்” என்று தெரிவித்த சைலேந்திர பாபு, “தற்போது நாமக்கல் மாவட்டத்தில் நடந்துள்ள சம்பவம் வடமாநில கொள்ளையர்களுக்கு பயத்தை ஏற்படுத்தி இனி தமிழகம் பக்கமே போக கூடாது என கொள்ளையர்கள் முடிவு எடுக்குமளவுக்கு செய்திருக்கும். துணிச்சலாக செயல்பட்ட நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணனுக்கும் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர், ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் போலீசாருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் ” எனவும் குறிப்பிட்டார் சைலேந்திர பாபு.