டி20 உலகக்கோப்பையை பிரதமர் நரேந்திர மோடியிடம் கொடுத்து இந்திய அணி வீரர்கள் வாழ்த்துப் பெற்றனர்.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 17 ஆண்டுகளுக்கு பின் டி20 உலகக்கோப்பையை வென்றிருந்தது. இதையடுத்து, இந்திய அணி வீரர்கள், மேற்கிந்திய தீவுகளின் பார்படாஸில் இருந்து ஏர் இந்தியா தனி விமானம் மூலம் டெல்லிக்கு இன்று (ஜூலை 04) காலை 09.00 மணிக்கு வந்தடைந்தனர்.
டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் மேள, தாளங்கள் முழங்க இந்திய அணி வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நடன கலைஞர்களுடன் இந்திய அணி வீரர்கள், குறிப்பாக ரோஹித் சர்மா டி20 உலகக்கோப்பையுடன் நடனமாடி மகிழ்ந்தனர். பின்னர், டி20 உலகக்கோப்பை மற்றும் மூவர்ண கொடியுடன் வடிவமைக்கப்பட்ட கேக்கை வெட்டி மகிழ்ந்தனர்.
இதையடுத்து, டெல்லி ஐடிசி மவுரியா ஹோட்டலில் இருந்து பேருந்து மூலம் பிரதமர் இல்லத்திற்கு இந்திய வீரர்கள் சென்றனர். கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி வீரர்கள் பிரதமர் நரேந்திர மோடியிடம் டி20 உலகக்கோப்பையைக் கொடுத்து வாழ்த்துப் பெற்றனர்.
பின்னர், இந்திய வீரர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, அவர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து, இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் விருந்தளித்தார். சாம்பியன்ஸ் என பெயரிடப்பட்ட சிறப்பு ஜெர்சியை அணிந்த படி பிரதமரை வீரர்கள் சந்தித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வின் போது, பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.