நம்மூர்

ஈரோடு மாவட்டத்தில் , தடையை மீறி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்:ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் வீரப்பன் சத்திரத்திலும், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் பவானி அந்தியூர் ரோடு பகுதியிலும், ஈரோடு புற நகர் மேற்கு மாவட்டம் சார்பில் சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் போலீசார் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்து இருந்தனர். எனினும் தடை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் முன்னெச்சரிக்கையாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதன்படி, இன்று (டிச.30) காலை ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான கே.வி. ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் 500-க்கும் மேற்பட்டோர் ‘யார் அந்த சார்? ‘ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகையை கையில் ஏந்தி தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து , தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 500-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர் வீரக்குமார், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், துணை மேயர் கே.சி.பழனிசாமி, பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், கேசவமூர்த்தி, உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் எம் எல் ஏ தலைமையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 300 -க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் பவானி அந்தியூர் ரோடு பகுதியில் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பாக மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே சி கருப்பணன் எம் எல் ஏ தலைமையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஜெயக்குமார் எம் எல் ஏ முன்னிலை வகித்தார். இவ்வாறாக ஈரோடுமாவட்டம் முழுவதும் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.