நம்மூர்

கனமழை : பர்கூர் மலைப் பாதையில்மரங்கள் விழுந்து மண் சரிவு

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக பர்கூர் மலைப்பாதை சாலையில் மரங்கள் விழுந்து மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (11ம் தேதி) வெள்ளிக்கிழமை இரவு விடிய விடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக அந்தியூர்-பர்கூர்-கர்நாடக மலைப்பாதை சாலையில் தாமரைக்கரை, நெய்க்கரை உள்ளிட்ட இடங்களில் மரங்கள் விழுந்து மண்சரிவு ஏற்பட்டது. இதனால், நேற்று இரவு முதல் இன்று காலை வரை தமிழகம்-கர்நாடகம் இடையே அந்தியூர் வழியாக செல்லும் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார், வனத்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக விரைந்து வந்து, சாலையில் விழுந்து கிடந்த மரங்கள் மற்றும் மண்ணை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டதை தொடர்ந்து,அப்பாதையில் இன்று காலை முதல் போக்குவரத்து சீரானது.