நம்மூர்

வனவிலங்குகளை வேட்டையாட துப்பாக்கியுடன் திரிந்தவர் கைது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட துப்பாக்கியுடன் ஒரு கும்பல் சுற்றித்திரிவதாக சத்தியமங்கலம் வனத்துறை அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின்பேரில், வனத்துறையினர் தனிக்குழு அமைத்து கொண்டப்பநாய்க்கன்பாளையம் காவல் சுற்று குத்தியாலத்தூர் காப்புக்காடு பிசில் மாரியம்மன் கோயில் சரகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சத்தியமங்கலம் புளியங்கோம்பை பகுதியைச் சேர்ந்த நாராயணன் (வயது 32) என்பவர் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி மூலம் வனவிலங்குகளை வேட்டையாட சுற்றித் திரிந்ததாக தெரியவந்தது. இதனையடுத்து, வனத்துறையினர் அவரை கைது செய்து அவரிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கி, அரிவாள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும், நாராயணனுடன் வேட்டையாட வந்த மூன்று பேர் வனத்துறையினரைக் கண்டதும் தப்பியோடி விட்டனர். இதுகுறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.