ஆன்மீகம்

சென்னிமலை முருகன் கோயிலில்வேல் வழிபாடு

சென்னிமலையில் உள்ள முருகன் கோயிலில் கடந்த 2 ஆண்டுகளாக, இந்து அன்னையர் முன்னணி சார்பில் வேல் வழிபாடு தொடங்கி ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள முருகன் கோயில்களுக்கு வேல் கொண்டு சென்று வழிபாடு செய்வது வழக்கம். அதன்படி,இந்து அன்னையர் முன்னணி சார்பில் இவ்வாண்டின் வேல் வழிபாடு இன்று ( நவ.12) சென்னிமலையில் முருகன் கோயிலில் தொடங்கியது.
இதற்காக இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில், மாநில பொது செயலாளர் கிஷோர்குமார் மற்றும் நிர்வாகிகள் இன்று காலை சென்னிமலை முருகன் கோயிலுக்கு வேலுடன் வந்தனர். அங்கு முருகன் சன்னதி, மார்க்கண்டேஸ்வரர் மற்றும் காசி விசுவநாதர் சன்னதியிலும் வேலுக்கு பூஜைகள் செய்யப்பட்டது. இதுகுறித்து காடேஸ்வரா சுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறுகையில், ” முருக பக்தர்களுக்கு தொழில், ஆரோக்கியம், ஆயுள், புத்திர பாக்கியம், மன அமைதி ஆகிய பலன்கள் கிடைப்பதுடன், திருமண தடைகளும் நீங்க வேண்டும் என்பதற்காக இந்த வழிபாட்டை நடத்துகிறோம். கொங்கு மண்டலத்தில் உள்ள 7 திருத்தலங்களில் வேலுக்கு வழிபாடு செய்யப்பட்டு திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட மக்கள் வழிபாடு செய்ய ஒவ்வொரு ஊருக்கும் இந்த மங்கள வேல் எடுத்து செல்லப்படும். நிறைவாக அடுத்த மாதம் டிசம்பர் 25-ந் தேதி திருப்பூர் மாவட்டம் கொங்கணகிரி முருகன் கோயிலில் வழிபட்ட பின் அங்கிருந்து அழகுமலைக்கு புறப்பட்டு சென்று அங்கு அழகுமலை முருகன் கோயிலில் நிறைவு பூஜை நடைபெறும் ” என்றார்.