ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பணிகளில் வட மாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக கட்டுமான பணிகளில் வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். இதைப்போல் அரசு திட்டப்பணிகளிலும் வட மாநில தொழிலாளர்கள் அதிகளவில் ஈடுபட்டு வருகிறார்கள். ஈரோடு மாநகராட்சியில் பெரும்பள்ளம் ஓடை விரிவாக்கம், சோலாரில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி, ஈரோடு மத்திய பஸ் நிலையத்தில் புதிய வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், வட மாநில தொழிலாளர்கள் தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றனர். தீபாவளி முடிந்து கிட்டத்தட்ட 10 நாட்கள் கடந்தும் அவர்கள் ஈரோட்டுக்கு திரும்பி வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் மாநகராட்சியில் நடந்து வரும் கட்டுமான பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- ஈரோடு மாநகராட்சியில் நடந்து வரும் கட்டுமான பணிகளில் வட மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் ஈடுபட்டு வந்தனர் .இதில் பெரும்பாலானோர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்காக அவர்களின் சொந்த ஊருக்கு சென்ற நிலையில் தற்போது வரை திரும்பவில்லை. இதைப்போல் தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்ற வட மாநில தொழிலாளர்களும் இதுவரை திரும்பி வரவில்லை. ஈரோட்டில் அவர்களுக்கு கிடைக்கும் சம்பளத்தை போலவே அவர்களது சொந்த மாநிலத்திலும் வழங்க அம்மாநில அரசுகள் முன்வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் பெரும்பாலான தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திலேயே பணிபுரிய முடிவு எடுத்துள்ளனர். எனவே சொந்த ஊருக்கு சென்ற வட மாநில தொழிலாளர்களுக்கு பதிலாக புதிய தொழிலாளர்கள் பணிக்கு அழைத்து வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து, ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ராஜமாணிக்கம் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக பெருந்துறையில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களில் சொந்த ஊருக்கு சென்ற பெரும்பாலானோர் ஈரோடு திரும்பி வரவில்லை. இதற்கான காரணம் மத்திய அரசின் சிறப்பு திட்டங்களால் பீகார், ஒடிசா, மத்திய பிரதேசம், ஜார்கண்ட் என அந்தந்த மாநிலங்களிலேயே தொழில் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான தொழிலாளர்கள் தங்களின் சொந்த மாநிலத்திலேயே பணிபுரிய முடிவெடுத்துள்ளனர். தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் இது பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே மத்திய மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் உரிய கவனம் செலுத்தி தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்க வேண்டும். தற்போது ஈரோடு மாவட்டத்தில் வட மாநில தொழிலாளர்கள் பெரும்பாலானோர் திரும்பி வராததால் திட்டப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதைப்போல் தொழிற்சாலைகளிலும் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வட மாநில தொழிலாளர்களுக்கு சாதகமான சலுகைகளை தமிழக அரசு வழங்கினால் அவர்கள் தமிழகத்திற்கு வர வாய்ப்பு அதிகம் உள்ளது. அத்துடன் தொழில்துறை வளர்ச்சிக்கு தமிழக அரசு சாதகமான அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்
வடமாநில தொழிலாளர்கள்திரும்பி வராததால்,ஈரோடு மாவட்டத்தில் தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிப்பு
Shares: