புஞ்சைபுளியம்பட்டியில் அமைந்துள்ள தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் 18 -ம் படி திறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு 18- ம் படி ஏறி ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புஞ்சைபுளியம்பட்டியில் சித்தி விநாயகர், தர்மசாஸ்தா ஐயப்பன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஐயப்ப சுவாமிக்கு சபரிமலையில் உள்ளது போன்று 18 படிகள் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் முதல் சனிக்கிழமை 18ம் படி திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் பதினெட்டாம் படி நிகழ்ச்சியில் ஆண், பெண் இரு பாலரும் 18-ம் படி ஏற அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி இன்று காலை கோயில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமத்துடன் ஐயப்ப சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து 108 சங்காபிஷேகம் மற்றும் விசேஷ பூஜைகள் நடந்தன. இதை தொடர்ந்து குருசாமி முன்னிலையில் 18ம் படி திறக்கப்பட்டது. ஐயப்ப பக்தர்கள் ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ என்ற சரண கோஷத்தோடு ஒவ்வொரு படியாக வணங்கி படியேறினர். திரளான பக்தர்கள் 18ம் படி வழியாக ஏறி ஐயப்ப சுவாமியை தரிசித்தனர். தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 18 ம் படிக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.