ஈரோடு, பவானி ரோட்டில் ஆர். என்.புதூர் அடுத்துள்ளது பெருமாள் மலை. இங்கு மலைக் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இம்மலைக் கோயிலின் அடிவாரத்தை ஒட்டி சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். அவர்களுக்கு மின்சாரம், தண்ணீர் என போதிய அடிப்படை வசதிகள் இல்லாமலிருந்த நிலையில், அவர்களது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், அவர்கள் வசித்து வரும் பகுதியை வரன்முறைபடுத்த்தி, இந்து சமய அறநிலைத்துறை சார்பில் அவர்களை வாடகைதார்ரகளாக மாற்றி, இணைப்பு மற்றும் தண்ணீர் வரி, சொத்து வரி விதித்திட நில அளவீடு செய்யப்பட்டது. 73 வீடுகளுக்கு நில அளவீடு செய்யப்பட்ட நிலையில் நேற்று காலை திடீரென அப்பகுதி மக்கள் சிலர், தங்களை அங்கிருந்து காலி செய்ய முயற்சிகள் மேற்கொள்வதாக கூறி அப்பகுதி மக்கள் ஈரோடு, பவானி சாலையின் நடுவில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்ததையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக அலுவலர் கயல்வழி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களது அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்வதற்காக வரன் முறைப்படுத்தவே அளவீடு செய்யப்படுவதாகவும், அவர்களை அங்கிருந்து காலி செய்ய சொல்லவில்லை என்பதையும் தெளிவுபடுத்தினர். அதன்பின்னர் , சாலைமறியலில் ஈடுபட்டிருந்த அப்பகுதி மக்கள் சமாதானம் அடைந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சாலைமறியல் காரணமாக அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது