நம்மூர்

செல்லப் பிராணிகளுக்கு பெற வேண்டும் உரிமம்

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி விதிகளின் படி, பொதுமக்கள் தங்களது வீடுகளில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு(நாய், பறவை) தலா ரூ.250 கட்டணம் மாநகராட்சியில் செலுத்தி உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். உரிமம் பெற வருகிற டிசம்பர் மாதம் 31ம் தேதி கடைசி நாள் ஆகும். இதில், உரிமம் பெற விண்ணப்பிக்கும்போது, செல்லப்பிராணிகளின் உரிமதாரர் திடக்கழிவு மேலாண்மை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும். செல்லப்பிராணிகள் அறையை போதுமான அளவு இயற்கை வெளிச்சம் காற்றோட்டம் இருக்குமாறு கட்டமைப்பு செய்ய வேண்டும். செல்லப்பிராணிகளுக்கு முறையாக தடுப்பூசி போடப்பட்டு, அதற்கான சான்றிதழ் பராமரிக்க வேண்டும். அதன் கழிவுகளை தனியே ஒரு கொள்கலனில் சேகரித்து சுகாதார முறைப்படி ஒவ்வொரு நாளும் அப்புறப்படுத்த வேண்டும். எவ்வித தொற்றுநோய் ஏற்படாமல் கவனமாக கண்காணித்து வர வேண்டும். ஏதேனும் நோய் தொற்று ஏற்பட்டால், மாநகர நல அலுவலருக்கு விபரம் தெரிவிக்க வேண்டும். சாதாரண காயங்கள் ஏற்படாமல், அதன் அறை மற்றும் சுற்றுப்புறங்களை பராமரிக்க வேண்டும். அருகில் வசிப்பவர்களுக்கு ஆபத்து அல்லது தொல்லைகள் ஏதும் விளைவிக்க கூடாது. வசிக்கும் அறை, குளிப்பாட்டும் வசதி, தண்ணீர் வசதி, கழிவுகளை அப்புறப்படுத்தும் வசதி மற்றும் இதர சுகாதார வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கழிவுகள், சிறுநீர், உணவு வெளியேற்றம் மற்றும் இதன் கழிவுகள் வெளியேற்றங்களை முறையாக சுகாதார முறைப்படி அப்புறப்படுத்த வேண்டும். பொதுமக்களுக்கு தொந்தரவு, எரிச்சல், அசௌகரியம் ஏற்படுமாறு பொது இடங்கள் அல்லது தனியார் இடங்களில் கழிவேற்றம் செய்வது கூடாது. பொது இடங்களில் இருப்பிடம் அமைக்க கூடாது. பிராணிகள் வளர்க்கும் இடங்களை ஆணையர் மற்றும் ஆணையரால் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரிகள் பகல் அல்லது இரவு நேரங்களில் ஆய்வு மேற்கொள்வதற்கு அணுகும் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். முறையான உரிமம் இல்லாமலோ அல்லது வெளியில் சுற்றி திரிந்தாலோ அல்லது பொது இடங்களில் வாழ்விடங்கள் அல்லது அறைகள் அமைத்திருந்தாலோ அல்லது வழிகாட்டு நிபந்தனைகள் மீறி இருந்தால் பிராணிகள் எவ்வித அறிவிப்பும் இன்றி பிடித்து செல்லப்படும் என ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது