Uncategorizedநம்மூர்

ஈரோடு, அந்தியூர், கோபி, மொடக்குறிச்சி, பெருந்துறையில் ரூ.,100 கோடியில் சாலைகள் மேம்படுத்தப்படும் :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி அவர் ஈரோடு மாவட்டத்தில் இரண்டு நாள் பயணமாக நேற்று ஈரோடு வருகை தந்தார். ஈரோடு சோலார் பகுதியில் இன்று (டிச.20) நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு , ஈரோடு மாவட்டத்தில் ரூ.951 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறைவு பெற்ற 559 திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். அத்துடன் அவர், ரூ.133 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 222 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ. 284 கோடியே 2 லட்சம் மதிப்பீட்டில் 50,088 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்கினார்.
இவ்விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:
தமிழ்நாட்டின் புதிய வரலாற்றுக்கான தொடக்கம் இந்த ஈரோட்டு மண். தந்தை பெரியாரைக் கொடுத்த மண் இந்த மண். தந்தை பெரியார் , பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் இல்லாமல், திராவிட இயக்கம் இல்லை; இன்றைய வளர்ச்சி நிறைந்த அறிவார்ந்த தமிழ்நாடும் இல்லை. கேரள மாநிலத்தில் வைக்கம் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது,கேரள மக்கள் நமது திராவிட மாடல் ஆட்சியை பாராட்டுகிறார்கள் அதற்கு காரணம், ஈரோடு மண்ணின் மைந்தர் பெரியார் போட்ட அடித்தளம் தான் இந்த நேரத்தில் எனக்குள் ஒரு சோகம் இருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் நம்மை விட்டு பிரிந்த சோகம் தான் அது. அவர் இல்லாதது ஈரோடு தொகுதிக்கு மட்டுமின்றி தமிழகத்திற்கும் மிகப்பெரிய இழப்பு.
கடந்த மூன்றாண்டு காலத்தில், ஈரோடு மாவட்டத்திற்கு இந்த அரசு செய்திருக்கும் பணிகளின் பட்டியல் மிக மிக நீளமானது. அவற்றில் சிலவற்றை மட்டும் உங்களிடம் நினைவுபடுத்த விரும்புகிறேன். மேற்கு மண்டல மக்களின் நீண்டகால கோரிக்கையான அத்திக்கடவு அவினாசி திட்டத்தை, கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ஆம் நாள் தொடங்கி வைத்தோம். இதன்கீழ் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 357 ஏரிகளுக்கு நீர் வழங்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் தந்தைப் பெரியார் மருத்துவமனையில், ரூ.80 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய பல்நோக்கு மருத்துவமனை கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மலைவாழ் மக்களின் பொருளாதார மேம்பாட்டை கணக்கில் கொண்டு தாளவாடி மற்றும் பர்கூர் மலைப்பகுதிகளில், 5 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தலா 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன சேமிப்புக் கிடங்கு கட்டப்பட்டு, தற்போது உழவர்கள் மற்றும் வியாபாரிகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஈரோடு, கோபி, சத்தியமங்கலம் மற்றும் பெருந்துறை ஆகிய 4 இடங்களில் அறிவுசார் மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. நம்பியூர் வட்டாரத்தில், 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தின் நீண்ட நாள் கோரிக்கையான 22 கிராம ஊராட்சிகளில் இருக்கும் 434 ஊரக குடியிருப்புகளுக்கு, 482 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பிலான கூட்டுக் குடிநீர் திட்டம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இன்று கொண்டு வரப்பட்டிருக்கிறது. பவானிசாகரில் தியாகி ஐயா ஈஸ்வரன் முழு திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தை திறந்து வைத்திருக்கிறேன்.
மாவீரன் பொல்லானுக்கு மணிமண்டபம் அமைக்க ஒரு கோடியே 82 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, ஜெயராமபுரத்தில், அவரின் முழு திருவுருவச் சிலையுடன் அரங்கம் அமைக்க இன்றைக்கு நான் அடிக்கல் நாட்டியிருக்கிறேன். சுதந்திரப் போராட்டத் தியாகி திருப்பூர் குமரன் நினைவைப் போற்றும் வகையில் சென்னிமலையில் மணிமண்டபம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும். தமிழ்நாட்டில் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட பால்வளத் தந்தை எஸ்.கே.பரமசிவன் அய்யா திருவுருவச்சிலை, ஈரோடு பால் பண்ணையில் நிறுவப்படும். ஈரோட்டில் மஞ்சள் பொது வசதி மையம், கரட்டுப்பாளையத்தில் ஜிம்னாஸ்டிக் அரங்கம் அமைக்கப்பட இருக்கிறது. ஈரோட்டில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்கான இடம் கண்டறியப்பட்டு, விரைவில் அங்கு ஐ.டி. பார்க் அமைக்கப்படும். ஈரோடு மாநகராட்சி, அந்தியூர், கோபி, மொடக்குறிச்சி, பெருந்துறை போன்ற பகுதிகளில் இருக்கக்கூடிய சாலைகள் 100 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். பவானியில் உள்ள சங்கமேஸ்வரர் திருக்கோயில், கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரர் திருக்கோயில் மற்றும் வீர நாராயணப் பெருமாள் திருக்கோயில் பக்தர்களுக்கான வசதிகள், 10 கோடி ரூபாய் செலவில் அமைத்துத் தரப்படும்.
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு 15 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடமும், ஈரோடு மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலகத்திற்கு 8 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்களும் கட்டப்படும். சென்னிமலை ஒன்றியத்திற்குட்பட்ட 50 கிராமங்கள், சென்னிமலை, சித்தோடு, நசியனூர், கே.சி.பாளையம் பேரூராட்சிகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் 15 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். சத்தியமங்கலம் மற்றும் நம்பியூர் ஒன்றியங்களுக்கான கூட்டுக்குடிநீர்த் திட்டம் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், பவானிசாகர் ஒன்றியத்திற்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மேம்படுத்தப்படும்.
அந்தியூர் ஒன்றியத்திலுள்ள கத்திரிமலைப் பகுதி மலைகிராம மக்களின் நீண்டகாலக் கனவை நிறைவேற்றும் வகையில், 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மின் இணைப்பு வசதிகள் வழங்கப்படும். மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டத்தில் குரங்கன்பாளையம் நீர்ப்பாசன அமைப்புத் திட்டத்தின்கீழ் பயன்பெறும் உழவர்களுக்கு பலனளிக்கும் வகையில், 15 கோடி ரூபாய் செலவில், இந்தத் திட்டம் மேம்படுத்தப்படும்.
உயர்கல்வித் துறையின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ள ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில், 10 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், உலகத் தரத்திலான விளையாட்டு மைதானம், நூலக வசதிகள் மற்றும் குடிமைப் பணிகள் தேர்வுக்கான பயிற்சி மையம் அமைக்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் வாடகை கட்டடத்தில் இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய 15 துணை சுகாதார நிலையங்களுக்கு, 6 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சொந்தக் கட்டடங்கள் கட்டித் தரப்படும். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை, அரசின் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் 4.90லட்சம் பெண்கள் பயன் பெறுகிறார்கள். மாணவிகளின் உயர்கல்வி கனவுக்கு உறுதுணையாக இருக்கும்
புதுமைப்பெண் திட்டத்தில் 10 ஆயிரம் மாணவிகள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெறுகிறார்கள். அதேபோல், மாணவர்களின் உயர்கல்விக்கு துணை நிற்கும் ’தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தில் 12 ஆயிரத்து 407 மாணவர்கள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெறுகிறார்கள். மாணவர்களின் திறனை மேம்படுத்தும் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் மட்டும் 1 லட்சம் மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் 67 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, பல்வேறு நிறுவனங்கள் மூலமாக இதுவரை 7 ஆயிரத்து 630 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளது. இம்மாவட்டம் முழுவதும் 39 ஆயிரத்து 762 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டிருக்கிறது. அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் ஆயிரத்து 528 பேருக்கு வங்கிக் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. 78 ஆயிரத்து 235 உழவர்களுக்கு 3 ஆயிரத்து 484 கோடி ரூபாய் பயிர்க் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வாறாக, தொடர் திட்டங்களை தருகின்ற காரணத்தினால்தான், மக்கள் எங்களுக்கு தொடர் வெற்றிகளை தந்து கொண்டிருக்கிறார்கள். இந்த வெற்றிகளை கடந்த கால ஆட்சியாளர்களால் அதாவது, தற்போது எதிர்க்கட்சியாக இருக்கின்றவர்களால், தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த அரசுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதை கண்டு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி புலம்பிக் கொண்டிருக்கிறார்.
ஒரு எதிர்க்கட்சித் தலைவர் ஆளும்கட்சியை விமர்சிக்கலாம். தவறு கிடையாது. நியாயமான புகார்களாக இருந்தால் சொல்லலாம். ஆனால், தி.மு.க. ஆட்சி மேல் குற்றம் சாட்ட எதுவும் இல்லை என்பதற்காக அவர் பொய் சொல்லக்கூடாது. பழனிசாமி என்ற தனிநபராக அவர் பொய் சொல்லவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக சொல்கிறார். அது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. அண்மையில் ஏற்பட்ட ஃபெஞ்சல் புயலால் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மழைப்பொழிவு இருந்தது. தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து பல லட்சம் மக்களின் உயிரைக் காப்பாற்றி இருக்கிறோம். இரவு பகல் பார்க்காமல் அரசு இயந்திரம் செயல்பட்டது .மத்திய அரசின் நிதியை எதிர்பார்க்காமல் நிவாரண நிதியை இந்த அரசு வழங்கி வருகிறது, முன்னெச்சரிக்கை செய்யாமல் சாத்தனூர் அணையை திறந்துவிட்டார்கள் என்று ஒரு பொய்யை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பரப்பினார். ஆனால் உண்மையில், அந்த அணையை திறந்து விடுவதற்கு முன் ஐந்து முறை வெள்ள அபாய எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. முன்கூட்டியே எச்சரிக்கை செய்ததால்தான், பெரிய அளவில் உயிரிழப்புகளை நாங்கள் தவிர்த்திருக்கிறோம்.
ஆனால் அதிமுக ஆட்சி காலத்தில் தான் செம்பரம்பாக்கம் ஏரியை முன்னறிவிப்பு இல்லாமல் திறந்துவிட்ட காரணத்தினால், 200-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் இறந்தார்கள். சென்னையில் 23 லட்சம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியது.
இதையெல்லாம் மறைத்து, சாத்தனூர் அணையை வைத்து எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி இன்றைக்கு பொய் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த பொய்யையும் சட்டமன்றத்தில் விரிவாக நாங்கள் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினோம். அதனால், உடனே அடுத்து டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தை அவர் எடுத்துக்கொண்டார். நம்முடைய அரசு எதிர்க்கட்சிகள் கேட்பதற்கு முன்பே, சட்டமன்றத்தில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்திருக்கிறோம். ஆனால், அந்த தீர்மானத்தின்மீது எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி என்ன பேசினார்? ஏலம் விட்ட மத்திய அரசை கண்டிக்காமல், நம்முடைய அரசை குறை சொல்லி பேசினார். அதற்குரிய பதில்களையெல்லாம், அமைச்சர்கள் தெளிவாக பதில் சொன்னார்கள்.அதை கேட்காமல் சொன்னதையே, திரும்ப திரும்ப சொன்னார். நான் முதலமைச்சராக இருக்கும் வரை, அந்த திட்டத்தை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டேன் ‘ என்று நான் தெளிவாக சொன்னேன். அதையும் அவர் கேட்கவில்லை.
சட்டமன்றம் முடிந்த பிறகு பார்த்தால், டங்ஸ்டன் சுரங்க ஏலத்திற்கு காரணமான சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்ததே அ.தி.மு.க.தான் என்ற செய்தியை நாங்கள் வெளியே வந்த பிறகு கேள்விப்பட்டோம். உடனே அதையும் மழுப்ப தொடங்கினார். அரசை விமர்சனம் செய்து, அவர் சத்தம் போட்டு பேசினார். அவரிடம் நான் கேட்க விரும்புவது, ‘எங்களைப் பார்த்து கத்தி பேசும் நீங்கள், மத்திய அரசை பார்த்து கீச்சுக் குரலில் பேசக்கூட துணிச்சல் இல்லையா ?’ என்பது தான். மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தும், இந்த திராவிட மாடல் அரசுக்கு, தமிழ்நாட்டு மக்கள் மாபெரும் வெற்றியை கொடுக்கிறார்கள். என்னை பொறுத்தவரையில், மக்களாகிய நீங்கள் என் மேல் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு, நான் என்றும் உண்மையாக இருப்பேன். இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி என்றைக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை தான் வழங்கும். எங்களின் நல்லாட்சிக்கு, உங்களின் நல்லாசி எப்போதும் வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். இவ்விழாவில் அமைச்சர்கள் கே.என். நேரு, சு. முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மா. மதிவேந்தன், மற்றும் என். கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தியூர் ப. செல்வராஜ், கே.இ.பிரகாஷ், கு.சுப்பராயன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.ஜி. வெங்கடாசலம், சி. சரஸ்வதி, ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா , உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
+++