காவலர்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள் குறித்த ஆயுதக் கண்காட்சி ஈரோட்டில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கண்காட்சியை ஈரோடு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஜவகர் திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளரிடம் கூறியதாவது: காவல் துறையினரின் பணிகள், அவர்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள், உபகரணங்கள் ஆகியவை குறித்து பொதுமக்கள் குறிப்பாக மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இங்கு, இன்று ஒரு நாள், ஆயுதக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி, பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் அவர்களின் பாதுகாப்பு நலனுக்காக ஈரோடு நகரில் மார்க்கெட் பகுதியை சுற்றி 8 இடங்களில் செக்-போஸ்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதே போல், ஈரோடு நகரில் 12 இடங்களில் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் போலீசார் தீவிரமாக கண்காணித்து செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நடைபெறுகின்றதா? பொதுமக்களுக்கு கூட்ட நெரிசல் போன்ற சிரமங்கள் ஏற்படுகின்றதா ? என போலீசார் தீவிரமாக கண்காணிக்கிறார்கள். போலீஸ் உதவி ஆப் (app) என்ற ஒரு செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதில், பல்வேறு பிரச்சனைகள் சம்பந்தமாக எந்த போலீஸ் நிலையத்தை அணுகுவது, சைபர் கிரைம் போன்ற குற்றங்களால் பாதிக்கப்பட்டால் காவல் துறையில் யாரை தொடர்பு கொள்வது போன்ற தகவல்களை பொது மக்கள் தெரிந்து கொள்ளலாம். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு 300 கிலோ கஞ்சாவும், நடப்பு மாதம் இதுவரை 3 டன் , தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பள்ளி,கல்லூரிகள் அளவில் போதைக்கு எதிரான கிளப்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்