தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதையொட்டி, தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், ஈரோடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் சார்பில் ஈரோடு காவிரி ஆற்றில் வெள்ளத்தின் பாதிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் முருகசேன் தலைமை தாங்கினார். ஈரோடு தாசில்தார் முத்துக்கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில், வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் வெள்ளப்பெருக்கின்போது, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது எப்படி? என்பது குறித்து ரப்பர் படகுகளை பயன்படுத்தியும், முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்தம் தத்ரூபவமாக செய்து காண்பித்தனர். குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தால், வீட்டில் மற்றும் அருகில் உள்ள காலி தண்ணீர் கேன், தேங்காய் மட்டை, வாழைமரம், தெர்மாகோல் , வாகன டயர் டியூப் போன்றவற்றை பயன்படுத்தி மிதவை தயாரித்து எப்படி ? பாதுகாப்பாக வெள்ளத்தில் இருந்து தப்பிப்பது என்பது குறித்து மக்களுக்கு செய்முறையுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், தீயணைப்பு துறையில் பேரிடர் காலங்களில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள், அவற்றின் பயன்கள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர்கள் கணேசன், கலைச்செல்வன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் வருவாய் துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.