நம்மூர்

ஈரோட்டில் போக்குவரத்தில் மாற்றம்

தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் ஈரோடு மாநகரில் முக்கிய கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பொதுமக்கள் ஜவுளி வாங்க கடைவீதிகளில் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஆர்.கே.வி. சாலை, நேதாஜி சாலை, மணிக்கூண்டு, ஈஸ்வரன் கோவில் வீதி உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. ஈரோடு ஜி.ஹெச் ரோடு, மேட்டூர் ரோடு, பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு பகுதி, ஆர்.கே.வி ரோடு பகுதியில் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாகி வருகிறது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் ஈரோடு போக்குவரத்து போலீசார் போக்குவரத்தில் மாற்றம் கொண்டு வந்துள்ளனர். அதன்படி , ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கிலிருந்து மணிக்கூண்டு வரை பைக், ஸ்கூட்டர் போன்ற டூவீலர்களை மட்டுமே போலீசார் அனுமதித்து வருகின்றனர். பஸ், லாரி, கார், ஜீப், சரக்கு ஆட்டோ செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதைப்போல், வாகன நெரிசலை தவிர்க்க கருங்கல்பாளையம் காந்தி சிலை பகுதியில் வாகனங்கள் திருப்பி விடப்படுகின்றன. கூட்ட நெரிசலை பொறுத்து அவ்வப்போது போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படும். தீபாவளி முடியும் வரை இந்த நிலை தொடரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.