இந்த ஆண்டு வரும் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ரெயில்களில் பட்டாசுகளை கொண்டு செல்வதை தடுக்க அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில்வே போலீசார் கண்காணிப்பை தீவிர படுத்தியுள்ளனர். ஈரோடு ரயில்வே போலீசாரும் கடந்த சில நாட்களாக ரயில்களில் கண்காணித்து வருகின்றனர். ஈரோடு ரயில் நிலையத்தில் நிற்கும் ரயில்களில் ஒவ்வொரு ரயில் பெட்டியாக சென்று பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து வருகின்றனர்.இதேபோல் ஈரோடு ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இது குறித்து ஈரோடு ரயில்வே போலீசார் கூறியதாவது: – தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பயணிகள் யாராவது பட்டாசு கொண்டு செல்கிறார்களா? என தீவிரமாக கண்காணித்து வருகிறோம். ரயில்களில் பட்டாசு கொண்டு செல்ல தடை உள்ளது. பெரும்பாலான பயணிகளுக்கு விழிப்புணர்வு இருப்பதால் பட்டாசுகளை கொண்டு செல்ல முயற்சிப்பதில்லை. ஆனாலும் சிலர் இது போன்ற விதிமுறைகளில் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்களுக்கு மட்டுமல்ல மற்ற பயணிகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. எனவே தடையை மீறி பட்டாசு கொண்டு செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி முதல் முறையாக பிடிப்பட்டால் ரூ. ஆயிரம் அபராதம் அல்லது 6 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்படும். தொடர்ந்து விதி மீறல்களில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். தீபாவளி நெருங்கி வருவதால் ரயில்வே போலீஸ் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்