நம்மூர்

சென்னிமலை ஊராட்சி ஒன்றியஅலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

சென்னிமலை அருகே முகாசிபிடாரியூர் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஒன்றியத்தில் 22 கிராம ஊராட்சிகள் உள்ளது. இந்த ஊராட்சிகளில் அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சியாக முகாசிபிடாரியூர் ஊராட்சி இருந்து வருகிறது.இந்நிலையில், சமீபத்தில் முகாசிபிடாரியூர் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதாக தமிழக அரசு மூலம் அரசாணை வெளியிடப்பட்டது. மக்கள் தொகைக்கு ஏற்ப முகாசிபிடாரியூர் ஊராட்சியை பேரூராட்சியாக மாற்றாமல் 2-ஆக பிரித்து தனித்தனி ஊராட்சிகளாக செயல்படுத்த வேண்டும் என ஏற்கனவே ஊராட்சியில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதால் இனிமேல் வீட்டு வரி, குடிநீர் வரி மற்றும் இதர வரிகள் உயர்த்தப்படும் என்றும், விவசாய திட்டங்கள் மற்றும் 100 நாள் வேலை திட்டங்கள் உள்பட பல்வேறு திட்டங்களும் நிறுத்தப்பட்டு பொது மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் என்றும் கூறி இந்த அரசாணைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், முகாசிபிடாரியூர் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இன்று (ஜன.23) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்த ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முகாசிபிடாரியூர் ஊராட்சியின் முன்னாள் தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன், துணை செயலாளர் தம்பிதுரை, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சிவசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ காங்கேயம் நடராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். மேலும் , இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜம்பு என்கிற சண்முகசுந்தரம், சமூக ஆர்வலர் பாரதி மற்றும் அ.தி.மு.க, பாரதிய ஜனதா கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தே.மு.தி.க, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் சென்னிமலை அனைத்து வணிகர்கள் சங்கம், நுகர்வோர் பாதுகாப்பு மன்ற நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.