நம்மூர்

வடகிழக்கு பருவ மழை : முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக1,500 மணல் மூட்டைகளுடன் நெடுஞ்சாலை துறை தயார்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,500க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.
ஈரோடு கோட்ட மாநில நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பிரிவின் பெருந்துறை உட்கோட்டம் சார்பில் 383 கி.மீ. நீளமுள்ள சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஈரோடு கோட்டப் பொறியாளர் ரமேஷ்கண்ணா அறிவுறுத்தலின் பேரில், பெருந்துறை உட்கோட்ட உதவி கோட்டப் பொறியாளர் பிரபாகரன் தலைமையில், உதவி பொறியாளர் கோவேந்தன் கண்காணிப்பில் நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் 1,500க்கும் மேற்பட்ட மணல், மண் மூட்டைகள் தயார் செய்து வைத்துள்ளனர். மேலும் மரம் வெட்டும் இயந்திரங்கள், சவுக்கு கொம்புகள், பொக்லைன் இயந்திரங்கள், டிராக்டர்கள் போன்றவற்றையும் தயார் நிலையில் வைத்துள்ளனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: ஈரோடு மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழை சீசனில் தான் அதிக மழை பெய்யும். இந்த சீசனில் மழை நீர் அரிப்பால் சாலைகள் துண்டிக்கப்படுவது, மரங்கள், மரக்கிளைகள் ஒடிந்து விழுவது மற்றும் சாலையோர தடுப்புகளில் சேதம் ஏற்பட்டால் அவற்றை உடனுக்குடன் சரி செய்வதற்காக 30க்கும் மேற்பட்ட சாலை பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். சாலை ஓரங்களில் மண் அரிப்பு, சாலையோர நிலச்சரிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த பொக்லைன் இயந்திரங்களும் டிராக்டர்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளன. மழை நீரால் பாலங்களில் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகளையும் மண் மூட்டைகளையும் தயார் செய்து வைத்துள்ளோம். காற்றின் வேகத்தில் மரம் முறிந்து விழுந்தாலும் அவற்றை அப்புறப்படுத்துவதற்கான கட்டிங் மெஷின்களும் ஒளிரும் ஜாக்கெட் அணிந்த சாலை பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளனர். கனமழை ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.