நம்மூர்

கோபி அருகே அதிமுக முன்னாள் எம்பியிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்த தனியார் பள்ளி தாளாளர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள டி.ஜி.புதூர் காளியூர் பகுதியைச் சேர்ந்தவர் கே.கே.காளியப்பன். இவர், கோபி அதிமுக எம்பியாக 1999-2004 வரை பதவி வகித்தார். தற்போதும் கட்சியில் உள்ளார். இவர் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகரிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-கோபி குள்ளம்பாளையம் பகுதியை சேர்ந்த வேலுமணி என்பவர் கடந்த 2020ம் ஆண்டு பாரதி வித்யாலயா என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கி அதன் மூலம் பாரதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பாரதி வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியை நடத்தி வருகிறார். இந்த பள்ளிக்கூடங்களில் வேலுமணி தாளாளராக உள்ளார்.இவரும், இவருடைய நண்பர் கலிங்கியம் காமராஜ் நகரைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவரும் என்னிடம் வந்து, பாரதி வித்யாலயா பள்ளிக்கூடத்தில் ஹெலிபேட் அமைக்க வங்கியில் கடன் பெற முயற்சி செய்து வருகிறோம். ஆனால் கடன் தொகை கிடைக்க 3 மாதங்கள் ஆகும். எனவே ரூ.50 லட்சம் கொடுத்தால் பள்ளிக்கூடத்தில் பங்கு தாரராக சேர்த்து கொள்கிறோம் என்று கூறினர்.இதை உண்மை என நம்பி ரொக்கமாகவும், வங்கி கணக்கு மூலமும் 2 பேரிடமும் மொத்தம் ரூ.50 லட்சம் கொடுத்தேன். ஆனால் அவர்கள் கூறியபடி தன்னை பள்ளிக்கூடத்தில் பங்குதாரர்களாக சேர்க்கவில்லை. இதுகுறித்து கேட்ட போது வீண் சாக்குபோக்கு சொல்லி வந்தனர்.இதற்கிடையில் அறக்கட்டளை மூலம் பள்ளியை தற் போது நடத்தி வரும் சிவராஜ், வெங்கிடுசாமி ஆகியோரிடம் கடந்த பிப்ரவரி மாதம் கேட்டபோது தங்களுக்கும், அதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்து விட்டனர். பள்ளியில் பங்குதாரராக சேர்த்து கொள்வதாக கூறி கூட்டாக சதி செய்து நம்ப தகுந்த ஆசை வார்த்தைகளை கூறி பணத்தை பெற்று கொண்டுள்ளனர்.எனவே மோசடி செய்து ஏமாற்றிய வேலுமணி, தட்சிணாமூர்த்தி, மோசடிக்கு உடந்தையாக இருந்த சிவராஜ், வெங்கிடுசாமி ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் பேரில், காவல் ஆய்வாளர் சங்கீதா 2 பிரிவுகளின் கீழ் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.