நம்மூர்

ஈரோடு ரயில் நிலையத்தில்நவீன ஸ்கேனர் கருவி*

ஈரோடு ரயில்வே நிலையத்தில் அம்ரீத் பாரத் திட்டத்தில் ரூ.38 கோடி மதிப்பில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. இதில், ரயில் நிலையத்தில் ஒரு பிளாட்பார்மில் இருந்து அடுத்த பிளாட்பார்மிற்கு செல்ல ஏதுவாக நடை மேம்பாலம், கூடுதல் எக்ஸ்லேட்டர்கள், லிப்ட்கள், ரயில் நிலைய வளாகத்தில் பெரிய அளவிலான பார்க்கிங் வசதி, நவீன வசதிகளுடன் முன்பதிவு அறை, பயணிகள் தங்கும் அறை, ஒய்வு அறை போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஈரோடு ரயில்வே நிலையத்தில் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் லக்கேஜ் உடைமைகளை சோதனை செய்வதற்கு நவீன எக்ஸ்ரே ஸ்கேனர் பரிசோதனை செய்யும் கருவி புதிதாக நிறுவப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது : ஈரோடு ரயில்வே நிலையத்தில் அம்ரீத் பாரத் திட்டத்தில், பயணிகளின் உடைமைகளை சோதனை செய்வதற்கு நவீன எக்ஸ்ரே ஸ்கேனர் கருவி நிறுவப்பட்டுள்ளது. இதற்கு இன்னும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. பயணிகள் இந்த கருவியில் முன்புறம் உள்ள மேஜையில் தங்கள் உடைமைகளை வைத்தால், மறுபுறத்தில் ஸ்கேன் ஆகி அவை வெளியே வந்து விடும். வெடி பொருட்கள், ஆயுதங்கள் இருந்தால் ஸ்கேனர் கருவியில் இருந்து ஒலி எழும்பும். இதனை ரயில்வே அதிகாரிகள், ரயில்வே போலீசார் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பர். சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, இக்கருவி விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.