ஈரோடு மாநகரில் ஆயுதபூஜையையொட்டி சாலையோரங்களில் குவிந்த 300 டன் குப்பை கழிவுகள் நேற்று ஒரே நாளில் அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு மாநகரில் கடந்த 11ம் தேதி ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பொதுமக்கள் தங்களது வீடு, அலுவலகம், தொழிற்சாலை, வாகனங்கள் போன்றவற்றை சுத்தப்படுத்தி வாழை மர கன்றுகள், மா இலை தோரணம், வண்ண காகிதங்கள் அலங்கரித்து, பூ மாலைகளை வைத்து பூஜை செய்து வழிபட்டனர். இதற்காக வியாபாரிகள் வாழை மரக்கன்றுகளை சாலையோரம் வைத்து விற்பனை செய்து, விற்பனையாகாத வாழை மர கன்றுகளை பெரும்பாலான இடங்களில் வியாபாரிகள் அப்படியே விட்டு சென்றனர். மேலும், பூஜை முடிந்து பூக்கள், வாழை கன்றுகள் போன்றவற்றையும் சாலையோரங்களிலும், வீதிகளிலும் பொதுமக்கள் வீசி சென்றனர். இந்நிலையில், ஆயுதபூஜை கழிவு பொருட்கள் சுத்தம் செய்யும் பணியில் நேற்று மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். இதில், ஒரே நாளில் 300 டன் அளவுக்கு குப்பை கழிவுகளும், வாழை மரக்கன்றுகள் போன்றவை அகற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு மாநகராட்சியின் நான்கு மண்டலங்களிலும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 170 டன் வரை குப்பை கழிவுகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு, மக்கும் மாநகராட்சியின் நுண்ணுயிர் உரக்கிடங்குகளுக்கும், மக்காத குப்பை அரவை கிடங்குகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது, ஆயுதபூஜையையொட்டி மாநகரில் சேகரமான வாழைக்கன்று, குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஜேசிபி மற்றும் பொக்லைன் வாகனம் மூலமாக கழிவுகள் மொத்தமாக லாரிகளில் ஏற்றி அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. இதில், சராசரியாக மாநகரில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை விட 130 டன் கூடுதலாக சேகரமாகியுள்ளது. இதன்படி, மாநகரில் நேற்று ஒரு நாளில் மட்டும் 300 டன் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. குவியல் குவியலாக சேகரிக்கப்பட்ட வாழை மரக்கன்றுகள் மட்டும் சோலார் புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் கொட்டப்பட்டு, அவை மக்கியதும் அப்புறப்படுத்தப்படும். தொடர்ந்து, வழக்கம்போல் குப்பைகள் அகற்றும் பணி நடக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஈரோடு மாநகரில் ஒரே நாளில்300 டன் குப்பை கழிவுகள் அகற்றம்
Shares: