தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஈரோடு கடை வீதிகளில் உள்ள ஜவுளி கடைகளில் புத்தாடைகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. வரும் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டரை வாரங்களே உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஈரோடு மாநகரில் ஆர்கேவி சாலை, நேதாஜி சாலை, ஈஸ்வரன் கோவில் வீதி, பன்னீர்செல்வம் பார்க், மேட்டூர் சாலை, மீனாட்சி சுந்தரனார் சாலைகளில் உள்ள ஜவுளி கடைகளிலும், ஜவுளி சந்தைகளிலும் புத்தாடைகளை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. ஈரோடு மட்டும் அல்லாது மாவட்டத்தின் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் குடும்பத்தினருடன் வந்திருந்ததால் மாநகரில் பகல் நேரத்தை விட மாலை நேரத்தில் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மணிக்கூண்டு பகுதியில் சாலையோரங்களிலும் வியாபாரிகள் ஜவுளிகளை விற்பனை செய்ததால் அங்கும் அதிகளவில் மக்கள் கூடினர். இதனால், அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலினால் அசாம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க ஆங்காங்கே போலீசார் பொது மக்களோடு மக்களாக மப்டியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், சில இடங்களில் வாகன நெரிசலை ஒழுங்குப்படுத்தும் பணியிலும், பாதுகாப்பு பணியிலும் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.