நம்மூர்

அரசு பஸ்களில் மகளிருக்கு கட்டணமில்லா பயணம்:ஈரோடு மண்டலத்தில் நாளொன்றுக்கு 3 லட்சம் பயணம் -அமைச்சர் முத்துசாமி தகவல்

அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் புதிதாக வாங்கப்பட்ட 5 புதிய பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சி ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, ” அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கும் திட்டத்தின் கீழ் ஈரோடு மண்டலத்தில் மட்டுமே நாளொன்றுக்கு சுமார் 3 லட்சம் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
இத்திட்டத்தை முதல்வர் அவர்கள் துவக்கி வைத்த நாளில் இருந்து கணக்கிட்டால் கட்டணமில்லா பயணத்தில் இதுவரை சுமார் 33 கோடி பயணங்களை பெண்கள் மேற்கொண்டுள்ளனர்” என குறிப்பிட்டார்.
” ஈரோடு சோலாரில் அமைக்கப்பட்டுள்ள புதிய பஸ் நிலையத்தை இன்னும் 3 மாத காலத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது” என்றார் அமைச்சர் முத்துசாமி.
மேலும் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், ” மதுக்கடைகள் தொடர்ந்து செயல்படுவதில் நமது முதல்வருக்கு எள் அளவும் விருப்பம் இல்லை; என்றாவது ஒருநாள் மதுக்கடைகளை மூடவேண்டும் என்ற விருப்பம் முதல்வருக்கு உள்ளது. ஒரே நாளில் உத்தரவு போட்டு முதல்வரால் மதுக்கடைகளை மூடி விட முடியும். ஆனால் அப்படி உடனடியாக செய்தால் தமிழகத்தில் என்ன நிலைமை ஏற்படும் என அனைவருக்கும் தெரிந்ததே. மதுவிலக்கை தமிழகத்தில் படிப்படியாக கொண்டு வருவோம். இங்கு இருக்கக்கூடிய சூழல் நிலைக்கு பொறுத்து அதற்கேற்பவே நடவடிக்கை எடுக்கப்படும் ” என குறிப்பிட்டார்.
” மதுவிலக்கை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாடு நடத்துகிறது. இம்மாநாட்டை வி.சி.க., அதன் கொள்கை ரீதி அடிப்படையில் தான் நடத்துகிறதே தவிர, திமுக அரசுக்கு எதிராக இம்மாநாட்டை நடத்துவதாக அர்த்தமில்லை.” என கூறிய அமைச்சர் முத்துசாமி, ” வி.சி.க.,வின் இந்த மாநாடு மூலம் தமிழகத்தில் கூட்டணி மாற்றம் ஏற்பட வாய்ப்பே இல்லை” எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
++++