நம்மூர்

ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாகமொடக்குறிச்சியில் 52மி.மீ மழை பதிவு

கடந்த ஒரு வாரமாக ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் மாவட்டத்தின் மலைப்பகுதிகளான பர்கூர், கடம்பூர், தாளவாடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து பல்வேறு இடங்களில் மரங்கள் சாலையில் புரிந்து விழுந்தும் மண் சரிவும் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் நீண்ட போராட்டத்துக்கு பிறகு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.இதேபோல் அணை பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகள் நிரம்பி உள்ளது.
இந்த நிலையில் நேற்று (அக்.12) காலை முதல் ஈரோடு நகரில் வானம் வெயில் இன்றி மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் மழை பெய்யவில்லை. தொடர்ந்து நள்ளிரவுக்கு பின்னர் அதாவது இன்று அதிகாலை அளவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இதில், ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக மொடக்குறிச்சியில் 52 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. மேலும் ஈரோடு நகரில் பெய்த மழை காரணமாக ஈரோட்டில் பிரதான ஓடைகளாக உள்ள பெரும்பள்ளம் மற்றும் பிச்சைக்காரன் பள்ளம் ஓடைகளில் இன்று காலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் ஈரோட்டில் இருந்து கொடுமுடி வழியாக கரூர் செல்லும் சாலையில் உள்ள சாவடிபாளையத்தில் இருக்கும் ரயில்வே நுழைவு பாலத்தில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக அந்த ரயில்வே நுழைவு பாலம் அருகே செல்லும் கசிவு நீர் கால்வாயில் மழை நீர் அதிக அளவில் சென்றதால் அந்த ரயில்வே நுழைவு பாலத்தில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் குறிப்பாக வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
ஈரோடு-11, மொடக்குறிச்சி-52, கொடுமுடி-18, பெருந்துறை-7, சென்னிமலை-26, பவானி-1.80, வறட்டுப்பள்ளம்-2.80, கோபி-7.20, எலந்த குட்டைமேடு-3, கொடிவேரி அணை-5, குண்டேரிப்பள்ளம்-1.60, நம்பியூர்-7, பவானிசாகர் அணை-1.40, தாளவாடி-8.10.