ஆயுத பூஜை, விஜயதசமி, என தொடர் விடுமுறை காரணமாக விடுமுறை கழிப்பதற்காக வெளியூரில் தங்கி வேலை பார்க்கும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர். இதனால் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஈரோடு பஸ் நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தொலைதூரம் சொல்லும் பயணிகள் வசதிக்காக கூடுதலாக சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. இந்நிலையில் விடுமுறை முடிந்து நாளை (அக்.14) மீண்டும் பள்ளிகள், அலுவலகம் செல்ல வேண்டும் என்பதால் இன்று காலை முதலே ஈரோடு பஸ் நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக ஈரோடு ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை முதலே பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. விடுமுறைக்கு வெளியூரிலிருந்து ஈரோட்டுக்கு வந்த மக்கள் மீண்டும் வெளியூர் செல்ல வேண்டி இன்று அதிகாலை முதல் ரயில் நிலையத்திற்கு வரத் தொடங்கினர். முன்பதிவு பெட்டிகள் பெரும்பாலும் நிரம்பி விட்டதால் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம் பிடிக்க கடும் போட்டி நிலவியது. ரயிலில் இடம் பிடிக்க மக்கள் போட்டி போட்டுக் கொண்டு ஓடி இடம் பிடித்தனர். இதேபோல் விடுமுறைக்கு வெளியூருக்கு சென்றிருந்த பொதுமக்களும் இன்று ஈரோட்டுக்கு திரும்பினர். ஈரோடு வழியாக செல்லும் அனைத்து ரயில்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. பஸ் நிலையத்திலும் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. ரயில்வே போலீசார் பயணிகளின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ரயில் நிலையத்தில் நீண்ட நேரமாக இருக்கும் நபர்கள், தேவையின்றி சுற்றும் நபர்களை பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.