ஈரோடு மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மஞ்சள் பெருந்துறை அருகே கருமாண்டி செல்லிபாளையம், செம்மாம்பாளையம் ஆகிய இடங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூட மூலமாகவும் ஈரோடு மற்றும் கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைகள் சங்கங்கள் மூலமாகவும் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஏலத்தில் வெளி மாவட்டம், வெளி மாநில வியாபாரிகள் நேரடியாக வந்தும் மஞ்சளை கொள்முதல் செய்து செல்கின்றனர். இது தவிர வெளிமாநிலங்களுக்கும் மஞ்சள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த மாதங்களில் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.13 ஆயிரம் வரை விற்பனையான ஒரு குவிண்டால் மஞ்சள் தற்போது ரூ.2 ஆயிரம் விலை உயர்ந்து விற்பனையாகி வருகிறது. மேலும் விலை உயர வாய்ப்புள்ளதால் மஞ்சள் விற்பனைக்கு வரத்தாவது குறைந்துள்ளது.
இது குறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது:- ஈரோடு மாவட்டத்தில் கடந்த மஞ்சள் அறுவடை சீசனின் போது கடந்த மார்ச் மாதம் மஞ்சள் விலை கடுமையாக உயர்ந்து குவிண்டால் அதிகபட்சமாக ரூ.21,369 விற்பனையானது. அதன் பின் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் மஞ்சள் வரத்து அதிகரித்தாலும் அதிக அளவில் கொள்முதலானதாலும் மஞ்சள் விலை மீண்டும் குறைய தொடங்கியது. இருப்பினும் கடந்த மாதம் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.13 ஆயிரம் வரை என்ற விலையில் விற்பனையானது. தற்போது குவிண்டாலுக்கு ரூ.2000 வரை உயர்ந்து ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.15 ஆயிரத்து 300 வரை விற்பனையாகிறது. அதே விலையில் கடந்த சில நாட்களாக தொடர்கிறது.
ஈரோடு மற்றும் மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலியிலும் மட்டுமே அதிக வரத்துள்ளது. மஞ்சள் விலை மேலும் உயரும் என்ற எதிர்பார்ப்பில் பலரும் வாங்கி இருப்பு வைத்தனர். அதனால் இருப்பு அதிகம் உள்ளதால் வழக்கமான விற்பனை அளவை விட விற்பனை குறைந்து காணப்படுகிறது. அதுபோல கடந்த மாதம் வரை ஏற்றுமதியும் அதிகமாக இருந்தது. தற்போது ஏற்றுமதியும் குறைந்து காணப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மஞ்சள் விலை குவிண்டாலுக்குரூ. 2 ஆயிரம் வரை உயர்வு
Shares: