பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சார்பில் சென்னிமலை எம்.சந்திரசேகர் தலைமையில் சேலம் மாசு கட்டுப்பாட்டு வாரிய மண்டல இணை இயக்குனர் அலுவலகத்தில் நேற்று மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுகா, ஈங்கூர் ஊராட்சியில் அமைந்துள்ள சிப்காட் தொழிற்பேட்டையின் மையப்பகுதியில் நல்லா ஓடை செல்கிறது. இந்த நல்லா ஓடையில் தொடர்ந்து மாசுபட்ட ஆலைக் கழிவுநீர் கலந்து, புஞ்சை பாலத்தொழுவு ஊராட்சிக்கு உட்பட்ட சுமார் 477 ஏக்கர் பரப்பில் உள்ள பாலத்தொழுவு குளத்தில் கலக்கிறது. இதனை தடுக்க வேண்டிய மாசு கட்டுப்பாடு வாரியம் குறிப்பிட்ட ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்காததால் பாலத்தொழுவு குளத்தை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களும், 15க்கும் மேற்பட்ட ஊராட்சிகளிலும் நிலத்தடி நீர் மிகவும் மோசமடைந்து, விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அந்தத் தண்ணீரை மக்களால் பயன்படுத்த முடியாத அவல நிலை உள்ளது. எனவே ஓடை நீரில் கலக்கும் கனிம, கரிம ரசாயனங்களையும் கண்காணித்து நீரின் வேதியியல் தன்மைகளை ஆராய திருப்பூர் நொய்யல் ஆற்றில் நீதிமன்ற உத்தரவின்படி பல இடங்களில் நிறுவப்பட்டுள்ள தானியங்கி அளவீட்டு (ஆன்லைன் டிடீஎஸ் மீட்டர் ) கருவியை பெருந்துறை சிப்காட்டின் தெற்கு பகுதியில் உள்ள நல்லா ஓடையில் பொருத்த வேண்டும் என 15 ஊராட்சி மன்றங்களின் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி பாதிக்கப்பட்ட 15 கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த மக்களும் தங்கள் சொந்த நிதியிலிருந்து ரூ.3.50 லட்சம் செலவில் தானியங்கி அளவீட்டு கருவியை பொருத்தி அதனை பெருந்துறை சிப்காட் மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கிறோம். அதனை சிப்காட் நிர்வாகம் பராமரித்து உடனுக்குடன் உண்மையான நேர தரவுகளை மாசு கட்டுப்பாடு வாரியம் ஆன்லைனில் வெளியிடும் வகையில் இணைப்பு அளிக்க வேண்டும். இது தொடர்பாக கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் இருந்து பாதிக்கப்பட்ட மக்களே தங்கள் சொந்த நிதியில் இந்தக் கருவியை வாங்க ஏற்பாடு செய்துள்ளோம். தற்போது காற்று மாசுபாட்டை அளக்கும் கருவிகளை வைத்து காற்றின் தன்மையை இணையதளத்தில் இணைத்து கண்காணிப்பது போல இதனையும் விரைவில் செய்து முடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
பெருந்துறை சிப்காட் நல்லா ஓடையில் ஆன்லைன் டிடிஎஸ் மீட்டர் கருவியை பொருத்த அனுமதிக்குமாறு கோரிக்கை!!
Shares: