நம்மூர்

சாலையில் உலா வந்த ஒற்றை யானையின் அட்டகாசம்

தாளவாடி அருகே , சாலையில் உலா வந்த ஒற்றை யானை, அதனை காட்டுக்குள் விரட்ட சென்ற வனத் துறையினரையே விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் யானை சிறுத்தை, புலி,கரடி, செந்நாய், மான், போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றது. இந்நிலையில், சம்பவத்தன்று மதியம் தாளவாடியில் இருந்து ஆசனூர் செல்லும் சாலையில் கும்டாபுரம் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை சாலையில் உலா வந்தது. சாலையில் சிதறிக் கிடந்த கரும்புகளை சுவைத்தது. இதனால் அச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறை ஊழியர்கள் சாலையில் உலா வந்த அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சி செய்தனர்.ஆனால் அந்த யானை வனப்பகுதிகள் செல்லாமல் வனத்துறை ஊழியர்களையே விரட்டியது.இதில் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர்தப்பினர். ஒருகட்டத்தில், கோபமடைந்த அந்த ஒற்றைக் காட்டு யானை துதிக்கையால் சாலையில் இருந்த மண்ணை எடுத்து தன் மீதே வீசி கொண்டு ஆத்திரத்தை வெளிப்படுத்தியது. சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக சாலையில் உலா வந்த அந்த யானை பின்னர் தானாக வனப்பகுதிக்குள் சென்றது .இச்சம்பவத்தால் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.