நம்மூர்

கண்டெய்னர் லாரியில் கொள்ளை கும்பல் :மடக்கி பிடித்தனர் போலீசார்.

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள ஏ.டி.எம்களில் கொள்ளையடித்த வட மாநில கொள்ளையர்கள், தமிழகம் வழியாக தப்பி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து நாமக்கல் மாவட்ட எல்லையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வெப்படை அருகே கண்டெய்னர் லாரி ஒன்று வாகனங்களை இடித்துவிட்டு நிற்காமல் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனே, அப்பகுதிக்கு சென்ற போலீசார் அந்த கண்டெய்னர் லாரியை மடக்கிப் பிடிக்க முயற்சி செய்தனர். அந்த கண்டெய்னர் லாரிக்குள் இருந்த அந்த கொள்ளை கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில், அக்கொள்ளையர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, மற்றொருவரான ஹரியானா மாநிலத்தை சேர்ந்த அசர்அலி என்பவரின் இரண்டு கால்களிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்ததது. இதனையடுத்து , அக்கும்பலில் இருந்த மற்ற கொள்ளையர்களையும் மடக்கி பிடித்த போலீசார், வெப்படை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . இதனிடையே துப்பாக்கி சூட்டில் காயமடைந்த அசர்அலியை போலீசார், பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி அளித்தனர். அதனை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அசர்அலிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அசர்அலியின் காலில் தொடர்ந்து ரத்தம் வெளியேறி வந்ததாக கூறப்படுகிறது. எனவே மேல்சிகிச்சைக்காக கோவைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்