கல்வி

பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்கிடபாடபுத்தகங்கள் ஈரோடு வருகை

ஈரோடு மாவட்டத்தில் , 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்கான இரண்டாம் பருவ பாட புத்தகங்கள் ஈரோடு வந்தடைந்து , இருப்பு அறையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் நடைபெற்று வரும் காலாண்டு தேர்வுகள் வரும் 27ம் தேதி நிறைவடைகின்றது. அதை தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு பின்னர், மீண்டும் அனைத்து பள்ளிகளும் அக்டோபர் மாதம் 3ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதையடுத்து, 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இரண்டாம் பருவ பாட புத்தகம் வழங்குவதற்காக தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் இருந்து பாடபுத்தகங்கள் ஒவ்வொரு மாவட்டமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக இரண்டாம் பருவ பாட புத்தகங்கள், நோட்டுகள் ஈரோடுக்கு வந்தடைந்து அவை, ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் உள்ள இருப்பு அறையில் வகுப்பு மற்றும் பாட வாரியாக பிரித்து வைக்கப்பட்டு உள்ளது.