நம்மூர்

“ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு2026 பொதுத் தேர்தல் வெற்றிக்கான முன்னோட்டமாக அமையும்”:திமுக வேட்பாளர் சந்திரகுமார் பேட்டி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று (பிப்.5) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்டுள்ள வி.சி.சந்திரகுமார் சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் உள்ள பிவிபி கிட்ஸ் ஸ்கூலில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் இன்று காலை தனது வாக்கை செலுத்திய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட 33 வார்டுகளிலும் நானும் அமைச்சர் முத்துசாமியும் நடந்து சென்று வாக்குகள் சேகரித்தோம். சுமார் 140 கிலோ மீட்டர் நடந்துள்ளோம். அப்போது மக்களை நேருக்கு நேராக சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அவர்கள் இந்த ஆட்சியின் மீது எந்த அதிருப்தியும் தெரிவிக்காமல் சில கோரிக்கைகளை முன் வைத்தனர். அவற்றை நிறைவேற்றுட ஆவன செய்வதாக நாங்கள் உறுதி அளித்துள்ளோம். பொதுவாக நான்காண்டுகள் ஆட்சி நடந்து பிறகு ஆட்சி மீது மக்களிடம் அதிருப்தி இருக்கும். ஆனால் இந்த ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி இருப்பதை நாங்கள் பார்க்கவில்லை.தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாள் மட்டுமே வேனில் சென்று வாக்கு சேகரித்தோம்.ஈரோட்டை சுற்றி சுமார் 200 கிலோ மீட்டர் அளவிற்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியின்போது , பாதாள சாக்கடை திட்டத்தில் 75 சதவீத பணிகள் மட்டுமே செய்யப்பட்டிருந்தது. அதையும் நாங்கள் நிறைவேற்றி உள்ளோம். ஒரு கவுன்சிலர் போல அமைச்சர் முத்துசாமி மக்களின் குரலுக்கு செவிமடுத்து உடனடியாக மாவட்டத்தின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கிறார். எனவே எங்களுக்கு மக்களிடம் பெரும் ஆதரவு இருக்கிறது. மிகப்பெரிய வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம். இத்தேர்தலில் என்னை எதிர்த்து 45 பேர் களம் காண்கின்றனர். ஆனால் நான் யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை. எங்களது நான்காண்டு திமுக அரசின் சாதனைகளை குறிப்பாக தமிழ் புதல்வன் ,விடியல் பயணம் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறி பிரச்சாரம் மேற்கொண்டோம். திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. அதனால் மிகப்பெரிய வெற்றியை நாங்கள் அடைவோம். கடந்த இடைத்தேர்தலின் போது அரசின் மீது சில குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் சுமத்தின. அதற்கு விடை அளிக்க முதலமைச்சர், துணை முதலமைச்சர் இங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஆனால் தற்பொழுது இத்தேர்தலில் உள்ளூர் கட்சி நிர்வாகிகளை கொண்டு தேர்தலை சந்திக்க முதல்வர் மற்றும் துணை முதல்வர் உத்தரவிட்டனர். எனவே வெளி மாவட்டங்களில் இருந்து அமைச்சர்களோ வேறு யாரும் வரவில்லை. மக்களிடம் எங்களுக்கு பெரும் ஆதரவு உள்ளது. இந்த இடைத்தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்த அரசின் சாதனைகளை விளக்கி உள்ளார். அது ஒன்றே தேர்தலில் எங்களுக்கு மிகப்பெரிய வெற்றியை தரும். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இந்த இடைத்தேர்தலின் முடிவு , வரும் 2026 ல் நடக்கவிருக்கும் தமிழக சட்டமன்ற பொது தேர்தலில் எங்களுக்கு கிடைக்கப் போகும் பிரமாண்டமான வெற்றிக்கான முன்னோட்டமாக அமையும். இவ்வாறு சந்திரகுமார் தெரிவித்தார்