நம்மூர்

ஈரோட்டில், தடகள வீராங்கனையிடம் செல்போன் பறிப்பு

ஈரோடு வஉசி விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு தடகள சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு மாவட்டங்களுக்கு இடையேயான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் 2024 போட்டி கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ,மாணவியர் பங்கேற்றனர். இவர்களில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானம் அருகே பவானி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் தடகளப் போட்டி இன்று நிறைவடைந்ததையடுத்து, போட்டியில் பங்கேற்ற வெளி மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் தங்களின் சொந்த ஊருக்கு திரும்பினர். இவர்களில் திருவண்ணாமலை மாவட்ட சேர்ந்தவர்கள், ஈரோடு பஸ் நிலையம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது,அவர்களில் செல்வி (19) என்பவர் செல்போனில் பேசியபடி நடந்து தனியாக வந்து கொண்டிருந்ததாகவும், அப்போது இவரை பின்தொடர்ந்து ஒரே பைக்கில் வந்த 3 வாலிபர்கள், திடீரென செல்வியின் செல்போனை பறித்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த செல்வி கூச்சலிட்டார். ஆனால் அதற்குள், பைக்கில் வந்த அந்த மர்மநபர்கள் தப்பி சென்று விட்டனர். இதை தொடர்ந்து, செல்வியின் உடன் வந்த சக தடகள வீரர்கள்,வீராங்கனைகள் , பவானி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், மர்மநபர்களை விரைவில் கண்டுபிடித்து செல்போனை மீட்டு தர நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததை அடுத்து, சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.