நம்மூர்

தொடர் விடுமுறை நிறைவு:ஈரோடு பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் அக்டோபர் 31ம் தேதி முதல் நவம்பர் 3ம் தேதி வரை என நான்கு நாட்கள் தமிழக அரசு தொடர்விடுமுறை அறிவித்தது. இந்த தொடர் விடுமுறை இன்று நிறைவடையும் நிலையில், வெளியூர்களுக்கு சென்ற பொதுமக்கள் விடுமுறை முடிந்து ஊர் திரும்புவதால் தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் பஸ் நிலையங்கள் , ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் இன்று அதிகமாக காணப்படுகிறது. இதன்படி, ஈரோட்டில் மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் இன்று (நவ.3) அதிகமாக காணப்படுகிறது.திருப்பூர்,மதுரை, ஒசூர் சேலம் , விழுப்புரம் உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. தமிழகஅரசின் சார்பில் 200 சிறப்பு பேருந்துகளும் மற்றும் தனியார் பேருந்துகளும் உடனுக்குடன் இயக்கப்படும் நிலையிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால் பேருந்துகளில் இடம் பிடிக்க ஒருவருக்கு ஒருவர் முந்திக்கொண்டு செல்கின்றனர். உட்கார இருக்கை கிடைக்காமல் பல பேருந்துகளில் பயணிகள் நின்று கொண்டே பயணம் செல்லும் நிலையும் உள்ளது. நேரம் அதிகரிக்க அதிகரிக்க பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை. அதிகரிக்க கூடும் என்பதால் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில், தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனுக்குடன் போக்குவரத்து துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.