ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு(பேட்டியா) சார்பில் ஆண்டுதோறும் ஈரோட்டில் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள பரிமளம் மகாலில் கடந்த ஆண்டு செப். 29ம் தேதி முதல் அக். 2ம் தேதி வரை 4 நாட்கள் கண்காட்சி நடத்தப்பட்டது. இந்த கண்காட்சியில் 150 கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் முதல் முயற்சியாக, கடை வைத்த சிறு, குறு தொழில் முனைவோருக்கு சென்னை அலுவலக எஸ்சி-எஸ்டி அலகு மூலமாக 10 பேருக்கும், ஆக்ரா அலுவலக எஸ்சி-எஸ்டி அலகு மூலமாக 3 பேருக்கும் 100 சதவீதம் மானியமாக ரூ. 2 லட்சத்து 64 ஆயிரத்து 615 வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, எம்எஸ்எம்இ மூலமாக 58 பேருக்கு 80 சதவீத மானியமும், ஜிஎஸ்டி தொகையும் சேர்த்து ரூ.16 லட்சம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மானிய தொகைகள் கிடைக்க உறுதுணையாக இருந்த மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன அமைச்சகத்தின் (எம்எஸ்எம்இ) இணை இயக்குநருக்கும், மாநில அரசு அதிகாரிகளுக்கும் ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது என்று இக்கூட்டமைப்பின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.