வணிகம்

ஈரோடு மாவட்டத்தில் 93 தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி

தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை ஒட்டி பட்டாசு உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பட்டாசு மொத்தமாக கொள்முதல் செய்து சில்லரை விலையில் விற்பனை செய்யவும் வியாபாரிகளும் தற்காலிக பட்டாசு கடைகளை அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து இ- சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் கடந்த 12-ந் தேதி வரை விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்காலிக பட்டாசு கடைகளை அமைக்க கோரி அளிக்கும் விண்ணப்பங்களை மாவட்ட வருவாய் துறையினர், தீயணைப்புத்துறை, காவல்துறை ஆகிய அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு உரிய பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டிருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க உத்தரவு பெற்றுள்ளது. இதன் பெயரில் ஈரோடு மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க உரிமம் கோரி ஆன்லைனில் 236 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த 236 விண்ணப்பங்களில் தற்போது வரை 93 கடைகளுக்கு ஆய்வின் அடிப்படையில் பட்டாசு கடை அமைக்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது.