வணிகம்

நாளை ஆயுத பூஜை: பொரி ரெடி

ஆயுதபூஜையை முன்னிட்டு, ஈரோட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொரி தயார் நிலையில் உள்ளது.
நாடு முழுவதும் ஆயுதபூஜை பண்டிகை, நாளை (அக். 11) கொண்டாடப்பட உள்ளது. இப்பண்டிகையையொட்டி, வணிக நிறுவனங்கள், கடைகள், பணி மனைகள், கல்வி நிறுவனங்கள், வீடுகள் மற்றும் வாகனங்களை சுத்தம் செய்து பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். இந்த பூஜையில் முதன்மையான பொருளாக பொரி வைத்து பூஜிக்கப்படும். ஆயுதபூஜை நாளை கொண்டாடப்படுவதால், உற்பத்தி செய்யப்பட்ட பொரி, தயார் நிலையில் பாக்கெட் செய்து விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஈரோடு சூளையில் பொரி உற்பத்தியாளர் சுப்பிரமணியன் என்பவர் கூறியதாவது: பொரி உற்பத்தி செய்ய ‘இன்டால்-64’ என்ற ரக அரிசி தான் பயன்படுத்தப்படும். இந்த நெல் ரகம் தமிழக மண்ணில் வருவது கிடையாது. இதனால், கர்நாடகா மாநிலம் தாவணேகரே, மாண்டியா, மைசூர், கொள்ளேகால் போன்ற பகுதியில் இருந்து ‘இன்டால்-64’ நெல் ரகத்தில் உற்பத்தியான அரிசியை கொள்முதல் செய்து, பொரி தயாரிக்கிறோம். கர்நாடகா மாநிலத்தில் கடும் மழை பொழிவால் கடந்த ஆண்டை விட நடப்பாண்டு அரிசி, குவிண்டாலுக்கு ரூ.400 வரை விலை உயர்ந்துள்ளது. தற்போது ரூ.3,200க்கு கொள்முதல் செய்து வருகிறோம். பொரி உற்பத்திக்கு வேலை ஆட்கள் பற்றாக்குறையால் கடந்த காலங்களை போல இல்லாமல், தற்போது மிஷினில் அரிசி வறுத்து, பொரி உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால், விரைவாக பொரி தயார் செய்யப்படுகிறது. ஈரோடு பகுதியில் தயாரிக்கும் பொரி முழுக்க முழுக்க ரசாயனம் சேர்க்காமல் தயாரிக்கப்படுவதால், குறைந்தது 3 மாதம் வரையிலும் கூட கெட்டு போகாமல் இருக்கும். வியாபாரிகள் ஆர்டர் கொடுப்பதற்கு ஏற்ப பொரி, நிலக்கடலை, பொட்டுக்கடலை தயாரிக்கப்பட்டுள்ளது. 100படி(50 பக்கா) கொண்ட மூட்டை மொத்த விலையில் ரூ.750 முதல் ரூ.850 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விலையில் போக்குவரத்து வாடகைக்கு ஏற்ப ரூ.100 வரை சேர்த்து விற்பனை செய்வார்கள். ஒரு பக்கா பொரி ரூ.20 வரை விற்பனை செய்யப்படும். இந்த விலை ஊருக்கு தகுந்தபடி சற்று மாறுபடும். நாங்கள் தயாரிக்கும் பொரியினை ஈரோடு மட்டுமின்றி, பவானி, அந்தியூர், பெருந்துறை, திருப்பூர், காங்கயம், சேலம், எடப்பாடி, நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மொத்தமாக வாங்கி சென்று விற்பனை செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.