வணிகம்

ஆயுத பூஜை : களை கட்டுது அலங்காரப் பொருட்கள் விற்பனை

ஆயுதபூஜையையொட்டி, அலங்காரப் பொருட்கள் விற்பனை களை கட்டுகிறது.
அரசு மற்றும் தனியார் அலுவலகம், தொழிற்சாலைகள், வீடுகள் என அனைத்து இடங்களிலும், நாளை ஆயுத பூஜை விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு, அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில், வண்ண மயமான காகித தோரணங்கள் செயற்கை பூக்கள், பிளாஸ்டிக் மாலைகள், அலங்காரப் பொருட்கள் ஆகியவற்றால் அலங்கரிப்பது வழக்கம். அதன்படி, ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சூப்பர் மார்க்கெட், ஸ்டேஷனரி மற்றும் சீசன் நேர கடைகளில், ஆயுத பூஜைக்கு தேவையான அலங்காரப் பொருட்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. இதில், அலுவலகம், வீட்டு நுழைவு வாயிலில் தொங்க விடப்படும் செயற்கை மாலைகள், பூஜையறையை அலங்கரிக்கும் வண்ண பிளாஸ்டிக் பூக்கள், ஆயுத பூஜை என எழுதப்பட்ட தெர்மாகோல் அட்டை, ஜிகினா தாள்கள், தோரணம் கட்ட பயன்படும் வண்ண மயமான காகிதங்கள் போன்றவை விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன.
குறைந்த பட்சம், ரூ.10 முதல் அதிகபட்சம் ரூ.1,500 ரூபாய் வரையிலான அலங்காரப் பொருட்கள் உள்ளன.