விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச குறைந்த செலவில் விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் தானியங்கி முறையில் இயங்கும் புதிய மெக்கானிசத்தை சென்னிமலையை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன் என்பவர் கண்டுபிடித்துள்ளார்.
கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து தண்ணீரை எடுத்து ஒவ்வொரு வயல்களிலும் பாய்ச்சுவதற்காக தனித்தனி வால்வுகளை கொண்ட கண்ட்ரோலரை (கட்டுப்பாட்டு கருவியை) விவசாயிகள் பொருத்தி இருப்பார்கள்.
அதாவது 6 வயல்கள் இருந்தால் மோட்டாரில் இருந்து வரும் மெயின் குழாயில் இருந்து ஒவ்வொரு வயலுக்கும் தனித்தனி குழாய்கள் என 6 குழாய்கள் அமைத்து அதன் ஒவ்வொன்றிலும் தனித்தனி வால்வுகள் பொருத்தப்பட்டிருக்கும். இதில் எந்த வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டுமோ அந்த வால்வை மட்டும் திறந்து விட்டால் தேவைப்படும் வயலில் தண்ணீர் பாயும். இந்த வால்வுகளை திறந்து மூடுவதற்கு தற்போது செல்போன் மூலம் தானியங்கி முறையில் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு கருவிகள் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் ஒவ்வொரு வால்வுக்கும் சுமார் 10 ஆயிரம் ரூபாய் வீதம் 6 வால்வுகளுக்கு மொத்தம் ரூ.60 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு ஆவதுடன் இதற்கான கண்ட்ரோலுடன் (கட்டுப்பாட்டு கருவி) சேர்த்து ரூ.1 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு ஆவதால் விவசாயிகள் இந்த வால்வுகளை பொருத்த முடியாத நிலையில் இருந்தனர்.
இதனை அறிந்த சென்னிமலை அருகே மணிமலை, காளிக்கோ நகரை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன் (வயது 52) என்பவர் குறைந்த செலவில் மெக்கானிக்கல் முறையில் இயங்கும் தானியங்கி வால்வை கண்டுபிடித்துள்ளார். இந்த தானியங்கி வால்வு மூலம் எந்த வயலுக்கு எவ்வளவு நேரம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என்பதை துல்லியமாக கணக்கீடு செய்யும் வகையில் கண்ட்ரோலரையும் (கட்டுப்பாட்டு கருவி) உருவாக்கியுள்ளார். இதுகுறித்து விவசாயி சுப்பிரமணியன் தெரிவித்ததாவது:
இந்தியா ஒரு விவசாய நாடு. இந்தியாவில் சுமார் 10 கோடி குடும்பங்களுக்கு மேல் விவசாய நிலம் வைத்து விவசாயம் செய்து வருகிறார்கள். விவசாயத்தில் நீர் பாய்ச்சுவது மிக முக்கியமான அங்கம் ஆகும். கிணறு மற்றும் போர்வெல்களில் இருந்து தண்ணீர் எடுத்து விவசாய நிலங்களில் தண்ணீர் பாய்ச்சுகிறோம். மோட்டார் மூலம் கிணறுகளில் இருந்து வெளியே எடுக்கப்படும் தண்ணீரை நமக்குத் தேவையான இடத்தில் பாய்ச்சுவதற்கு வால்வுகள் மிக முக்கியமாகும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் தேவையான தண்ணீர் பாய்ச்சிய பின் அடுத்த இடத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு நாம் வால்வுகளை திருப்பி விட வேண்டும். தற்போது தேவையான இடத்திற்கு மொபைல் ஆபரேட்டிங் மூலம் ஆட்டோமேட்டிக்காக திருப்பி கொள்ளும் வால்வுகள் உள்ளன. இந்த வால்வுகள் ஒவ்வொன்றும் சுமார் 10 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான விலை உள்ளது. ஒரு விவசாயி தன்னுடைய நிலத்தில் 6 இடங்களில் தண்ணீரை திருப்பி விட வேண்டும் எனில் அதற்கு 6 வால்வுகளை பொருத்த வேண்டும். அந்த 6 வால்வுகள் மற்றும் அதற்கான கண்ட்ரோலரும் சேர்ந்து பொருத்தினால் சுமார் 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக செலவாகிறது. சாதாரண, நடுத்தர விவசாயிகளால் அவ்வளவு செலவு செய்து வால்வுகளை பொருத்த முடிவதில்லை. அதனால் நான் தற்போது மின்சாரம் மூலம் மெக்கானிக்கல் முறையில் இயங்கும் ஆட்டோமேட்டிக் வால்வை கண்டுபிடித்துள்ளேன். நிலையாக பொருத்தப்பட்டுள்ள ஒரு பெரிய குழாய்க்குள் மோட்டாரில் இருந்து வரும் தண்ணீர் உள்ளே செல்லும். அதே குழாயில் தண்ணீர் வெளியேற 6 வழிகள் உள்ளன. குழாய்க்குள் உள்ள புதிய மெக்கானிசத்தை ஆட்டோமேட்டிக் கண்ட்ரோலர் மற்றும் சிறிய அளவிலான மின் மோட்டார் மூலம் இயக்கி நாம் தேவையான நேரத்துக்கு தேவையான வழியில் தண்ணீரை அனுப்பி கொள்ளலாம்.
இந்த தண்ணீர் வெளியேறும் 6 குழாய்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முடியும்.
நான் புதிதாக வடிவமைத்ததுள்ள ஆட்டோமேட்டிக் வால்வுகள் அனைத்தும் ஒரே குழாய்க்குள் இயங்குவதாலும் இந்த வால்வுகளை இயக்க ஒரு கண்ட்ரோலர் மற்றும் ஒரு மோட்டார் மட்டுமே தேவைப்படுவதாலும் இதை குறைந்த விலையில் விவசாய பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியும். அத்துடன் இந்த வால்வுகள் மெக்கானிக்கல் முறையில் இயங்குவதால் பல ஆண்டுகளுக்கு பழுதடையாமல் இயங்கும். எனவே இந்த புதிய ஆட்டோமேட்டிக் வால்வு விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வகையில் கண்டுபிடித்தேன். இந்த வால்வுகளை முதன்முதலாக ஒரு லேத் பட்டறையில் செய்த போது தோல்வியில் முடிந்ததால் அங்கேயே போட்டுவிட்டு வந்து விட்டேன். அதன் பின்னரும் முயற்சி செய்து வால்வை உருவாக்கி வீட்டுக்கு கொண்டு வந்து அதனை பரிசோதித்த போது அதுவும் தோல்வியில் முடிந்தது. பின்னர் தோல்வியில் கிடைத்த அனுபவங்களை வைத்து தற்போது 3-வது முறையாக தயார் செய்த போது வெற்றி கிடைத்துள்ளது. இவ்வாறு சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 10-வது வரை படித்துள்ள விவசாயி சுப்பிரமணியனுக்கு மோகனாம்பாள் என்ற மனைவியும், வாஞ்சிநாதன் என்ற மகனும் உள்ளனர். சுப்பிரமணியன் ஏற்கனவே 2000-ம் ஆண்டில் இவரது கண்டுபிடிப்பு ஒன்றுக்காக அப்போதைய கல்வி அமைச்சர் அன்பழகனிடம் இருந்து தமிழ்நாடு அறிவியல் விருதும், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமிடம் இருந்து 2005-ம் ஆண்டு தேசிய விருதும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாய நிலங்களுக்குதண்ணீர் பாய்ச்ச தானியங்கி முறையில் இயங்கும் புதிய மெக்கானிசம்: சென்னிமலை விவசாயி கண்டுபிடிப்பு
Shares: