வணிகம்

ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை மந்தம்வரும் நாட்களில் வியாபாரம் சூடு பிடிக்குமா..?

ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் எதிரொலியாக, ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை மந்தமாகவே இருந்ததாக ஜவுளி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரசித்தி பெற்ற ஈரோடு ஜவுளிச் சந்தை பிரதி வாரம் திங்கள்கிழமை இரவு துவங்கி, செவ்வாய்க்கிழமை வரை நடைபெறுவது வழக்கம். இங்கு லுங்கிகள், காட்டன் உடைகள், துண்டுகள், உள்ளாடை ரகங்கள், குழந்தைகளுக்கான ஆடைகள் என அனைத்து வகையான ஜவுளி ரகங்களும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த ஈரோடு வார ஜவுளிச் சந்தையில் தமிழகம் மட்டும் அல்லாது கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் வந்து ஜவுளி ரகங்களை வாங்கிச் செல்வது வழக்கம். இச்சந்தையில் கடந்த 5 வாரங்களாக விற்பனை 25 சதவீதத்துக்கும் குறைவாக இருந்த நிலையில், இந்த வாரம் நடந்த சந்தையில் 15 சதவீதம் அளவுக்கு விற்பனைக் குறைந்துள்ளதாக ஜவுளி வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஜவுளி வியாபாரிகள் தரப்பில் மேலும் கூறியதாவது:
ஈரோடு ஜவுளி சந்தையில் இந்த வாரம் விற்பனை மிக மந்தமாகவே இருந்தது. இதற்கு மிக முக்கிய காரணமாக கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ள பாதிப்பால், அங்கிருந்து மொத்த வியாபாரிகள் ஈரோடு ஜவுளி சந்தைக்கு கொள்முதலுக்கு வராததை சொல்லலாம். மற்றபடி பெரும்பாலும், தமிழகத்தின் சில பகுதிகளில் இருந்து மட்டுமே பொதுமக்கள், வியாபாரிகள் மட்டுமே கொள்முதலுக்கு வந்திருந்தனர். ஆக மொத்தத்தில் இந்த வாரம் ஈரோடு ஜவுளி சந்தையில் ஜவுளி ரகங்களின் சில்லறை விற்பனை மிகவும் மந்தமாகவே இருந்தது.
தீபாவளிக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், புதிய ரக, துணிகள், வேட்டி, துண்டு, நைட்டி உள்ளிட்ட அனைத்து வகை ஜவுளிகளும் வரத்தொடங்கி உள்ளன. எனவே, இனி வரும் நாட்களில் இச்சந்தையில் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.