கீழ்பவானி கால்வாயில் முறை வைத்து தண்ணீர் திறப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முறை பாசனம் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து , வரும் நாட்களில் முறை வைத்து தண்ணீர் திறப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என அதிகாரிகள் அறிவித்து இருந்தனர். அதன்படி ஈரோடு கோணவாய்க்கால் பகுதியில் செயல்படும் நீர்வளத்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் விவசாயிகள் உடனான ஆலோசனை கூட்டம் இன்று (அக்.8) நடைபெற்றது. இதில் கீழ்பவானி மூலம் பாசனவசதி பெறும் விவசாயிகள் கலந்து கொண்டு, முறை வைத்து நீர் வழங்கும் திட்டத்தை இந்த மாத இறுதி வரை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கை தொடர்பாக விவசாயிகள் மற்றும் அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று கொண்டிருந்த நிலையில், ஒரு குறிப்பிட்ட தரப்பை சேர்ந்த விவசாயிகள், மற்ற பிரச்சனைகள் தொடர்பான கருத்துகளை பேசி, மற்றொரு தரப்பை சேர்ந்த விவசாயிகளை கருத்து தெரிவிக்க விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த விவசாயிகள், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கினர். இதனால் செயற்பொறியாளர் அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகளை சமாதானம் செய்யும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதனால் ஆலோசனை கூட்டம் பாதியிலேயே நின்றது. இதனையடுத்து அவர்களை சமாதம் செய்த அதிகாரிகள், முறை வைத்து தண்ணீர் திறப்பது தொடர்பாக, அந்தந்த பகுதிகளில் தனித்தனியாக ஆலோசனை கூட்டம் நடத்தி, முடிவு செய்யப்படும் என தெரிவித்ததையடுத்து,விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.