மருத்துவம்

“இந்தியாவில் ஆண்டுக்கு 1.70 லட்சம் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிப்பு”புற்றுநோய் சிகிச்சை மருத்துவ நிபுணர் தகவல்

ஈரோடு சுதா கேன்சர் சென்டரின் புற்றுநோய் சிகிச்சை மருத்துவ நிபுணர் டாக்டர் .சுகேஷ்வரன் .J. ( Dr.SUGASHWARAN.J.) அவர்கள் Erodians இணைய தளத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்ததாவது:
ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக ‘ ‘பிங்க் அக்டோபர் ‘ என்ற பெயரில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மார்பக புற்றுநோயை குறிக்கும் நிறம், பிங்க் என்பதால் ‘ பிங்க் அக்டோபர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த 1990களில் இருந்து உலகம் முழுவதிலுமே மார்பகப் புற்றுநோய் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே இதுகுறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அதுவும் குறிப்பாக இந்த மார்பக புற்று நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து விட்டால் பூரணமாக குணப்படுத்தி விடலாம் என்று தெரிவிக்கும் விதமாகவும், ஏற்கனவே மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஓர் ஆதரவு அளிக்கும் வகையிலும் இந்த பிங்க் அக்டோபர் ‘ எனும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் அக்டோபரில் கடைபிடிக்கப்படுகிறது.
இந்தியாவிலும் சரி,உலகளவிலும் சரி புற்று நோய்களின் பாதிப்பு என்றால் மார்பக புற்றுநோய் தான் அதிக எண்ணிக்கையில் உள்ளது. அதுமட்டுமின்றி மார்பக புற்றுநோயால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை ஆண்டொன்றுக்கு, சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் சுமார் 60 ஆயிரம் பேர் இப்புற்றுநோய் பாதித்து ஓராண்டுக்குள்ளேயே இறந்து விடுகின்றனர். இப்போதெல்லாம், சுமார் 50 சதவீதம் மார்பக புற்றுநோய் 50 வயதுக்கு குறைவாக இருக்கும் பெண்களுக்கே வருகிறது. இதற்கு காரணம், இன்றைய வாழ்க்கை முறையின் மாற்றங்கள். உணவு பழக்க வழக்கம், மன அழுத்தம், 30 வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்ளுதல், சில சமயங்களில் மரபியல் ரீதியில் என பல காரணங்கள் இருக்கின்றன.
மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால் மார்பக புற்றுநோய் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறையும்.
வரும் 2040ம் ஆண்டுக்குள் 70 முதல் 80 சதவீதம் வரை பெண்கள், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படலாம் என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க உணவு பழக்கவழக்கங்களில் டயட் கண்ட்ரோல் செய்து கொள்வது, ஹார்மோன் மாத்திரைகளின் பயன்பாட்டை குறைத்துக் கொள்வது, புகைப் பழக்கம், மது பழக்கத்தையும் கண்ட்ரோல் செய்து கொள்வது, உடல் பருமன் ஆகாமல் உடற்பயிற்சி மூலம் பராமரித்து கொள்வது உட்பட சில செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். முக்கியமாக குழந்தை பிறந்த பிறகு குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுதல் முக்கியம். தாய்பாலூட்டுவதன் மூலம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதை தடுக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பொதுவாக, மார்பக புற்று நோய்க்கு , பாதிப்பின் நிலை (ஸ்டேஜ்) பொறுத்தே சிகிச்சை அமையும். நம்மூரை பொறுத்தவரை நாங்கள் இதுவரை 500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் சிகிச்சை அளித்திருக்கிறோம். இவர்களில் 60 முதல் 70 சதவீதம் வரை 3 அல்லது 4வது ஸ்டேஜ் பாதிப்புடன் சிகிச்சைக்கு வந்தவர்கள். இதற்கு காரணம், இதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததே. மார்பக புற்றுநோயை பொறுத்தவரை ஆரம்ப நோய் கண்டறிதல் (early diagnosis) மூலமாக இந்நோயை பூரணமாக குணப்படுத்தக் கூடிய வாய்ப்புகள் நிறைய உள்ளது.
சுதா கேன்சர் சென்டர்
இந்த அக்டோபர் மாதத்தில், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு சுதா கேன்சர் சென்டரில் மார்பக புற்றுநோய் குறித்த அறிவுரைகள், வருமுன் காக்கும் ஆலோசனைகள் ஆகியவற்றை தினமும் காலை 9 முதல் மாலை 6 மணி வரை வழங்குகிறோம். மேலும் , மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவைப்படும் சிகிச்சை சிறப்பு சலுகை கட்டணத்தில் அளிக்கப்படுகிறது. அதே போல், சிறப்பு சலுகை கட்டணத்தில் மேமோகிராம் எடுக்கப்படுகிறது. இவ்வாறு டாக்டர்.சுகேஷ்வரன் தெரிவித்தார்.