ஈரோடு அடுத்த ஆர்.என்.புதூர் அருகே பெருமாள் மலையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீமங்களகிரி பெருமாள் கோயில் அமைந்துள்ளது. புரட்டாசி மாத இரண்டாம் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று, இக்கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜை செய்யப்பட்டது. இங்கு, காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டு வருகின்றனர். ஈரோடு மட்டுமல்லாது சேலம் , நாமக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்றவாறு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு வருகை புரிந்துள்ள பக்தர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் மூலம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. சித்தோடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.