கல்வி

பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரியில் 24வது பட்டமளிப்பு விழா

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரியின் 24வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் கல்லூரி தலைவர் பாலசுப்ரமணியம் தலைமையில் இன்று (22ம் தேதி) நடைபெற்றது. இந்த விழாவிற்கு, கல்லூரியின் அறங்காவலர் டாக்டர் விஜயகுமார் ஐஏஎஸ் (ஓய்வு), கல்லூரி முதல்வர், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், 8 மாணவ, மாணவிகளுக்கு முனைவர் பட்டம் (பிஎச்டி), 99 மாணவ, மாணவிகளுக்கு முதுநிலை பட்டம் (பிஜி), 1,410 இளநிலை பட்டம் (யுஜி) என மொத்தம் 1,517 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. விழாவில், சிறப்பு விருந்தினர்களாக சோகோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரி பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு, சங்கரா கண் மருத்துவமனையின் நிறுவனர் பத்மஸ்ரீ டாக்டர் ரமணி, சுந்தர் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவர் சுந்தரம், ப்ரிகால் நிறுவனர் டாக்டர் விஜய் மோகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில், வெற்றியை நோக்கிய வாழ்நாள் பயணத்தில் கற்றல் என்பது மிக முக்கியமானது என்றும், வாழ்வில் சிறந்து விளங்க புதுமைகளை தழுவவும் பட்டதாரிகளை ஊக்குவித்து, அன்பான வாழ்த்துக்களுடன் அனைத்து பட்டதாரிகளுக்கும் அவர் தனது ஆசிகளை தெரிவித்தனர். தொடர்ந்து, சோகோ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு பேசுகையில், பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியானது மற்ற கல்லூரிகள் அனைத்திற்கும் முன்னோடியாக திகழ்வதற்கு, கல்லூரியின் இயற்கை சூழல், உலகத்தரம் வாய்ந்த வளாக அமைப்பு மற்றும் மாணவர்களின் பொறியியல் செய்முறை பயிற்சிகள் அனைத்தும் காரணமாக அமைகிறது. மக்கள் தொகையில் குறைவான எண்ணிக்கை உடைய வளர்ந்த நாடுகளை காட்டிலும் இந்தியா அதிக மக்கள் தொகையையும் பொறியாளர்களையும் கொண்டுள்ளது. குறைவான பொறியாளர்களைக் கொண்ட நாடுகளே உலகத்தரம் வாய்ந்த மென்பொருட்களை உருவாக்கும் பொழுது, நமது நாட்டில் அதைவிட சிறந்த மென்பொருட்களை உருவாக்க முடியும் என்று மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தினார். ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியின் மாணவர்கள் சோகோவில் பணியமர்த்தப்படுகின்றனர் என்று கல்லூரியின் மாணவ, மாணவிகளை வாழ்த்தி, பாராட்டுகளையும் தெரிவித்தார். தொழில்நுட்பம் இயந்திரம் சார்ந்ததாக மட்டுமே அல்லாமல் அது வாழ்க்கையில் ஒரு அங்கமாக உருவாக வேண்டும். மேலும், நமது பாரத பிரதமர் மோடி 2047 இல் இந்தியா வளர்ந்த நாடாக உருவாகும் என்ற அவரது கனவை பொறியாளர்களான நீங்கள் நனவாக்குங்கள் என்று ஊக்கப்படுத்தி வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, சங்கரா கண் மருத்துவமனையின் நிறுவனர் பத்மஸ்ரீ டாக்டர் ரமணி பேசுகையில், பொறியாளர்களான நீங்கள் தங்களது செயலில் நம்பிக்கையும் ஆர்வமும் கடின உழைப்பும் அவசியம் என்பதையும், சிறந்த வாழ்க்கைக்கு நல்ல நெறிமுறை மற்றும் குடும்பப் பற்று, தனித்திறன்களை வளர்த்தல் ஆகியவற்றை மேம்படுத்துவதோடு, எளிமையும் பணிவும், பொறுமையுமே வாழ்க்கைக்கான திறவுகோல் என்பதையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இதனையடுத்து, சுந்தர் எண்டர்பிரைசஸ் நிறுவனரும், சிடிஐஐசின் இயக்குனருமான சுந்தரம் பேசுகையில், நேர்மை, கோபம், போராட்டத்தை முறியடித்தல், வேலையில் கவனம் செலுத்துதல், பொறுமை, படைப்பாற்றல், சிந்தனைத் திறன், நேர மேலாண்மை பற்றியும் சிறந்த பேச்சாளர்களாகவும் தொடர்பாளர்களாகவும் உருவாக வேண்டும் என்பதையும் மாணவர்களுக்கு எளிதில் விளங்கும் வண்ணம் கதையின் வாயிலாக எடுத்துரைத்தார். இவ்விழாவில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உட்பட 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.