விவசாயம்

விவசாயிகளுக்கு வேளாண் உரிமை மின் இணைப்பை உடனே வழங்க கோரி மனு

தட்கல் திட்டத்திலும் மற்றும் அனைத்து வகையான வேளாண் மின் இணைப்பு திட்டங்களிலும் கடந்த மூன்று ஆண்டுகளாக காக்க வைக்கப்பட்டு உள்ள 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வேளாண் உரிமை மின் இணைப்புகளை உடனடியாக வழங்க கோரி , தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலங்களில் மனு கொடுக்கும் இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, ஈரோடு ஈவிஎன் சாலையில் உள்ள மின்வாரிய மண்டல தலைமை பொறியாளர் அலுவலகத்தில் ஏராளமான விவசாயிகள் திரண்டு, விவசாயிகளுக்கு வேளாண் உரிமை மின் இணைப்புகளை வழங்கக் கோரி மனு அளித்தனர். இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழகம் முழுவதும் தட்கல் திட்டத்திலும் மற்றும் அனைத்து வகையான வேளாண் மின் இணைப்பு திட்டங்களிலும் முன் பணம் செலுத்திய பிறகும் கடந்த மூன்று ஆண்டுகளாக காக்க வைக்கப்பட்டு உள்ள 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வேளாண் உரிமை மின் இணைப்புகளை வழங்காமல் மின்வாரியம் காலம் தாழ்த்தி வருகின்றது. மேலும் மின் இணைப்புகள் வழங்காததால் விவசாயிகளுக்கு பெருமளவு பொருளிழப்பு ஏற்பட்டுள்ளது. வங்கிகளில் வாங்கியுள்ள கடன்களை கட்ட முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இவ்வாறு விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.